Published : 01 Dec 2021 09:46 AM
Last Updated : 01 Dec 2021 09:46 AM

திருப்பூர் அருகே 12 வயது பள்ளி மாணவர் டெங்கு காய்ச்சலுக்கு பலி

திருப்பூர் அருகே சுல்தான்பேட்டை சிறுவன் இறந்த பகுதியில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பணிகள் மற்றும் காய்ச்சல் முகாம்

திருப்பூர்

திருப்பூர் அருகே மங்கலம் சுல்தான்பேட்டையைச் சேர்ந்த, 12 வயது பள்ளி மாணவர் டெங்கு காய்ச்சலுக்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் மங்கலத்தை அடுத்துள்ள சுல்தான்பேட்டை வெங்கடேஸ்வராநகரில் வசிக்கும், 12 வயது சிறுவனுக்கு நவ.10 ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது.

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், நேற்று உடல்நிலை மோசமடைந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் மற்றும் பெருமாநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் ஸ்ரீதேவி, மருத்துவர் சங்கவி மாவட்ட மலேரியா அலுவலர் சேகர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

அப்பகுதி முழுதும் துாய்மை பணி மேற்கொண்டு, கொசுப்புகை மற்றும் கொசுமருந்து தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மழைநீர் தேங்காதபடி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் நிலவேம்பு குடிநீர் வழங்கி, காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது.

2 வயது சிறுவன் உட்பட 7 பேருக்கு டெங்கு காய்ச்சல்:

திருப்பூர் மாநகரில் மழை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்திக்கு வழி வகுக்கிறது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் உயர்ந்து வருகிறது.

திருப்பூர் மாநகரில் தொடர்ச்சியாக டெங்கு பாதிப்பு இருந்து வரும் நிலையில், திருப்பூர் திருமுருகன்பூண்டி பெரியாயிபாளையத்தை சேர்ந்த 22 வயது ஆண், உடுமலை காந்திநகர் வி.கே.பி. நகரை சேர்ந்த 7 வயது சிறுவன், திருப்பூர் அவிநாசி சாலை அம்மாபாளையத்தை சேர்ந்த 2 வயது சிறுவன், திருப்பூர் காங்கயம் சாலை பாளையக்காட்டை சேர்ந்த 42 வயது ஆண், உடுமலை முக்கோணம் புளியங்காட்டை சேர்ந்த 4 வயது சிறுவன், திருப்பூர் காந்தி நகர் ஈபி நகரைச் சேர்ந்த 4 வயது சிறுமி, திருப்பூர் முதலிபாளையத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் உட்பட 7 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x