

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களை பாதுகாக்கம் சட்டம் இயற்ற வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சாதி மறுப்புக் காதல் திருமணம் செய்து கொள்ளும் இளம் தம்பதியினர் கவுரவக் கொலைக்கு ஆளாவது அதிர்ச்சியளிக்கிறது. இயக்கங்களிலும் இதிகாசங்களிலும் பேசப்படும் காதலை ஏற்றுக் கொண்ட சமூகம், நிஜ வாழ்க்கையில், யதார்த்தத்தில் காதலுக்குக் கடிவாளம் போட நினைப்பது பண்பாட்டு முரண்பாடாகும்.
காதல் என்ற போர்வையில் பெண்களுக்கு அநீதிகள் இழைக்கப்படுமேயானால் அது சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும். தனி நபர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. சாதி மறுப்புக் காதல் திருமணங்கள் செய்து கொள்பவர்களுக்கு தகுந்த பாதுகாப்புச் சட்டம் இருக்க வேண்டும்.
இளைஞர்களும், சமூக அமைப்புகளும், அரசியல் தலைவர்களும், தன்னார்வலர்களும் சாதிக் கொடுமைகள் தொடராதிருக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முன் வர வேண்டும். வருங்கால சந்ததியினர் சாதியக் கொடுமைகளில் சிக்காமல் வாழ்வதற்கு வழி கண்டிட வேண்டும்'' என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.