Published : 01 Dec 2021 09:22 AM
Last Updated : 01 Dec 2021 09:22 AM

மழைக்காலத்தில் இடர்பாடற்ற தமிழகத்தை உருவாக்க தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அர்ஜூனமூர்த்தி வேண்டுகோள்

மழைக்காலத்தில் இடர்பாடற்ற தமிழகத்தை உருவாக்க தொலை நோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூனமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக முதல்வருக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தங்களின் கடுமையான உழைப்பை தொடர்ந்து பார்த்து வருகிறேன். தங்களது சிரத்தையைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மகிழ்ச்சி அடைந்தாலும் இக்கடும்
முயற்சி எந்தளவுக்கு முன்னுதாரண மாற்றமாக ஆகப் போகிறது, தமிழகத்தின் தொடர் நலம் பேண வழிவகுக்கப் போகிறது? என்பதில் எனக்கு ஆழ்ந்த சந்தேகம் உள்ளது. இதை தங்களிடம் பகிரவே இந்த மடல்.

முன்னுதாரண முதல்வர்

கடந்த ஒரு மாதமாக கால்களை தண்ணீரிலும், கைகளை உணவு பரிமாறுவதிலும் வைத்துக்கொண்டு நீங்கள் படும் வேதனையை ஊர் அறியும். நாட்டுக்கே ஓர் முன்னுதாரண முதல்வராக, தலைவராக உங்கள் செயல்பாட்டில் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும், இந்த முயற்சி விழலுக்கிறைத்த நீராகிவிடுமோ என்ற ஐயப்பாடு என்னை வருத்த மடையச் செய்கிறது. ஏனென்றால் எந்தவொரு தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல் அன்றாடக் காட்சியாக இது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இத்தனை மக்கள் தொகை கொண்ட நாட்டில் கரோனாவை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசின் கட்டுப்பாடுகளும், மக்களின் புரிதலுமே காரணம்.

அணுகுமுறையில் மாற்றம் அவசியம்

அவ்வகையில், மழைக்கால இடர்பாடுகளை சீர் செய்யும் வழிமுறைகளை ஆராய்ந்து, பன்னாட்டு கட்டுமானத் தொழில் ஆலோசகர்களிடம் ஆலோசித்து, தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு வெள்ளை அறிக்கையை மக்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதன்மூலம் முன்னுதாரணமான மாற்றத்துக்கான முதல்வராக தாங்கள் செயல்பட வேண்டும். இது சாத்தியமாக வேண்டுமானால் காலத்திற்கேற்ப தங்களது செயல் மற்றும் அணுகுமுறையில் மாற்றம் இன்றியமையாதது. ஓர் தலைமைச் சமையல்காரர் அதில் விற்பன்னராக இருந்தாலும், அவர் சமையலுக்குப் பயன்படுத்தும் பொருள்களின் தரமே உணவின் சுவையாகும். அதுபோல தாங்கள் எத்தனை கடுமையாக உழைத்தாலும் தங்களுக்கு நிர்வாகத்தில் துணைபுரியும் அமைச்சர்கள், அரசு நிர்வாகிகளின் தேசப்பற்று, கடமை உணர்வு, காலம் தாழ்த்தாமை, தொலைநோக்குப் பார்வை, நிர்வாகத் திறமை, நேர்மை, ஊழலற்ற தன்மை, குழு வேலை அணுகுமுறை போன்ற எண்ணற்ற குணப் பொருள்களின் கலப்பே முன்னுதாரண மாற்றத்தின் காரணியாகும்.

எல்லா தமிழனுக்கும் ஆர்வம்

தங்களின் உழைப்பு வீணாகாதவாறு காலம் கடத்தாமல் இதனைச் சிந்தித்து செயல்படுத்த வேண்டுகிறேன். மழைக்காலத்தில் இடர்பாடற்ற தமிழகத்தைக் காணும் ஆர்வம் எல்லா தமிழனுக்கும் உள்ளது. இவ்வேதனை வருங்காலத்தில் ஏற்படாமல் இருக்க அரசு நிர்வாகத்துக்கு உத்தரவிடுங்கள். இவ்வாறு கடிதத்தில் அர்ஜூன மூர்த்தி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x