

அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து கழகத் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து, கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.அன்வர்ராஜா, இன்று (நவ.1) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்”
கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்”. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முதலே அன்வர் ராஜா, அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது குறித்து விமர்சித்து வந்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் அன்வர் ராஜா மீது அதிருப்தியில் இருந்தனர். அண்மையில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் அன்வர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்., இருவரையும் கடுமையாக விமர்சித்து வந்தார். முன்னதாக ஆலோசனைக் கூட்டத்தில் அன்வர் ராஜாவை, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரக் குறைவாகப் பேசியதும் இதற்குக் காரணம் எனப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த அதிரடி நீக்கம் இரவில் நடந்துள்ளது.