அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி; வட ​ஆந்திரா அருகே புயலாக டிச 4-ல் கரையை கடக்கும்: 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி; வட ​ஆந்திரா அருகே புயலாக டிச 4-ல் கரையை கடக்கும்: 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று வரும் 4-ம் தேதி வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும். குமரிக்கடல் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:

தெற்கு தாய்லாந்து, அதை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது விரைவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகரக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 2-ம் தேதி (நாளை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதையடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று 4-ம் தேதி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும். இதன் தாக்கத்தால் தமிழகத்தில் வரும் நாட்களில் மழை குறையும்.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி குமரிக்கடல் பகுதிவரை நீடிப்பதால் டிச.1-ம் தேதி (இன்று) கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதி களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 2, 3-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், 4-ம் தேதி ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் ஒருசில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

30-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் வீரபாண்டியில் 12 செ.மீ., சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

அந்தமானை காற்றழுத்த தாழ்வு பகுதி நெருங்குவதால் 1-ம் தேதி (இன்று) அந்தமான் கடல் பகுதிகள், தீவு பகுதிகள், 2-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், 3-ம் தேதி மத்திய வங்கக்கடல் பகுதிகள், 4-ம் தேதி மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அதிகபட்சம் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in