Published : 01 Dec 2021 06:38 AM
Last Updated : 01 Dec 2021 06:38 AM

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர் குழு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவம் வகையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம்அமைத்து தமிழக அரசு கடந்த2017-ல் உத்தரவிட்டது. அப்போலோமருத்துவர்கள் மற்றும் சாட்சிகளிடம் ஆணையம் ஓராண்டுக்கு மேல் விசாரணை நடத்தியது.

இந்நிலையில், ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரியும், தங்கள் மருத்துவர்கள் விசாரணையில் இருந்து ஆஜராக விலக்கு அளிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், கடந்த நவ. 25-ம் தேதி நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், கிருஷ்ண முராரி ஆகியோர், "ஆணையத்துக்கு போதுமான இடவசதி, அனைத்து கட்டமைப்புகளுடன் கூடிய மாற்று இடத்தை நவ.30-ம் தேதிக்குள் ஒதுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

ஆணையத்துக்கு கூடுதல் வசதி

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, "ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 700 சதுர அடியில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

அதற்கு, "இந்த 700 சதுர அடிஇடமும் போதுமானதாக இருக்காது. ஆணையத்துக்கு இன்னும் சிறப்பான வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இழுத்தடிக்கும் அப்போலோ

அப்போலோ தரப்பில் ஆஜரானமூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம், "அனைத்து சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும்" என்றார்.

ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆகியோர், "விசாரணையை இழுத்தடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அப்போலோ தனது கோரிக்கைகளை ஒவ்வொன்றாக முன்வைக்கிறது. அதை அனுமதிக்கக் கூடாது" என்றனர்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘எத்தனை சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யப் போகிறீர்கள் என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று அப்போலோ மருத்துவமனை தரப்புக்கு அறிவுறுத்தினர்.

மேலும், "இந்த விஷயத்தில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவும் வகையில், எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிடப்படும்’’ என்று கூறி, தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x