நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை; சென்னையில் இன்று அதிமுக செயற்குழுக் கூட்டம்: தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை; சென்னையில் இன்று அதிமுக செயற்குழுக் கூட்டம்: தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்பு
Updated on
1 min read

அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சென்னையில் இன்று நடைபெற உள்ள செயற்குழுக் கூட்டம், தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வியூகம் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கும் வகையில், அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 24-ம் தேதி நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தோல்வி குறித்து மூத்த தலைவர்களின் கருத்து மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல, வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், கோஷ்டி அரசியலைத் தடுக்க வேண்டும் என்பது குறித்து காரசாரமாக விவாதம் நடைபெற்றது.

இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் புதிய அவைத் தலைவர் தேர்வு குறித்து ஆலோசனை மேற்கொள்ள முடியாதநிலை ஏற்பட்டது.

இந்நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில், சென்னையில் உள்ளகட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (டிச. 1) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில், கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில், தலைமை எடுக்கும் முடிவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் மூத்த தலைவர்கள் உட்பட அனைத்து நிர்வாகிகள் மீதும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க ஒருங்கிணைப்பாளர்களுக்குக் கூடுதல் அதிகாரம் அளிப்பது, உட்கட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே நடைபெற்ற மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில்நடைபெற்ற மோதல் சம்பவம்காரணமாக, இன்று நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டம் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக அவைத் தலைவரான மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக ஆகஸ்ட் 5-ம் தேதி காலமானார். காலியாக உள்ள அவைத் தலைவர் பதவிக்கு இதுவரை யாரும் தேர்வு செய்யப்படவில்லை. இதனால், முதல்முறையாக அதிமுக செயற்குழுக் கூட்டம் அவைத் தலைவர் இல்லாமல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

காலியாக உள்ள அவைத் தலைவர் பதவிக்கு யாரும் தேர்வு செய்யப்படவில்லை. எனவே, முதல்முறையாக அதிமுக செயற்குழுக் கூட்டம் அவைத் தலைவர் இல்லாமல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in