

புதுச்சேரிக்கு 6 லாரிகளில் வந்த 1.5 லட்சம் கிலோ தரமற்ற அரிசி திருப்பி அனுப்பப்பட்டன.
தீபாவளியையொட்டி மாநிலத் தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் துறை, அரிசி மற்றும் சர்க்கரை கொள்முதல் செய்வதற்காக பாப்ஸ்கோ நிறுவனம் மூலம் டெண்டர் கோரியது. இருப்பினும் தீபாவளிக்கு குறுகிய நாட்களே இருந்ததாகக்கூறி பரிசு பொருட்கள் வழங்கப்படவில்லை. தீபாவளி முடிந்து மூன்று வாரங்கள் முடிந்த நிலையில் இலவச அரிசி, சர்க்கரை வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக குடிமைப் பொருள் வழங்கல் துறையினர் தரப்பில் விசாரித்தபோது, “புதுவை மாநிலத்தில் மொத்தமுள்ள 3.65 லட்சம் ரேஷன் கார்டுகளில் மாஹே பிராந்தியம் நீங்கலாக மீதமுள்ள 3.57 லட்சம் கார்டுகளுக்கு மட்டும் தீபாவளி பரிசு வழங்கப்பட உள்ளது. மாஹேவில் ஓணம் பண்டிகை பிரதானமாக கொண் டாடப்படுவதால் இலவச பரிசு அங்கு வழங்கப்படவில்லை.
புதுவைக்கு 2,626 டன், காரைக்காலுக்கு 609 டன், ஏனாமிற்கு 165 டன் அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் தரப்பட்டது. புதுவைக்கு 523 டன், காரைக்காலுக்கு 128 டன்,ஏனாமிற்கு 33 டன் சர்க்கரை வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் குடிமைப்பொருள் வழங்கல் துறைக்கு மொத்தம் ரூ.13.73 கோடி செலவாகும்.
புதுவை கூட்டுறவுத் துறையின் கீழ் 317, பாப்ஸ்கோ 35, தனியார் 25 என மொத்தம் 377 ரேஷன் கடைகள் இயங்கி வந்தன. இவற்றின் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி, தீபாவளி மற்றும் பொங்கல் பரிசுகள், பேரிடர் கால நிவாரணங்கள் வழங்கப்பட்டு வந்தது. இலவச அரிசி மற்றும் சர்க்கரையை மக்களுக்கு ரேஷன் கடை மூலம் வழங் குவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.
கடந்த ஆட்சியில் ஆளுநர் மற்றும் ஆட்சியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இலவச அரிசிக்கு பதில் பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. இதனால் கடந்த 2016-ம் ஆண்டு ரேஷன் கடைகள் மூடப்பட்டன. தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு அரசு அறிவித்த தீபாவளி பரிசு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் ஈரோட்டிலிருந்து புதுச்சேரிக்கு லாரியில் அரிசி வர தொடங்கியது. அந்த அரிசி தரமாக இருக்கிறதா என்று, குடிமைப்பொருள் வழங்கல் துறை, பாப்ஸ்கோ மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் தரப்பில் இணைந்து ஆய்வு செய்யப்படுகிறது.
இதுபற்றி அவர்கள் கூறுகையில், “புதுச்சேரிக்கு ஈரோட்டிலிருந்து நேற்று முன்தினம் 6 லாரிகளில் அரிசி வந்தது. அதில் 3 லாரிகளின் அரிசி தரமில்லாததால் திருப்பி அனுப்பப்பட்டன. நேற்று வந்த 7 லாரிகளில் தரமில்லாத 3 லாரிகள் அரிசியுடன் திருப்பி அனுப்பப்பட்டன. அரிசியின் தரம் எப்படி இருக்க வேண்டும் என்று அளவுகோல்கள் தரப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அரிசி ஏற்கப்படுகிறது. இதுவரை இரு நாட்களில் 7 லாரிகளில் வந்த 1.75 லட்சம் கிலோ அரிசி மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
6 லாரிகளில் 1.5 லட்சம் கிலோ அரிசி திருப்பி அனுப்பப்பட்டன. ஒரு லாரியில் 50 கிலோ எடையில் 500 மூட்டைகள் இருக்கும்” என்று தெரிவித்தனர்.