

மதுரை மாவட்டத்தில் நேற்று அதி காலை வரை மழை பெய்தது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம், அரசு மருத்துவமனையை தண்ணீர் சூழ்ந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தவித்தனர்.
மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது. பெரியார் பஸ் நிலையம், கோ.புதூர் பஸ் நிலையம் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் நேற்று காலை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரசு ராஜாஜி மருத்துவமனை யில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை தண்ணீர் சூழ்ந்தது. மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் செல்ல டீன் ரெத்தினவேலு ஏற்பாடு செய்தார்.
கே.கே.நகர் மானகிரி, ஏரிக்கரை சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் முறையான சாலை வசதியின்றி மக்கள், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். லேக்வியூ சாலையில் குடிநீர் திட்டப் பணிக்காக சாலையின் ஒருபுறம் தோண்டியுள்ளனர். நேற்று காலை பெய்த பலத்த மழையால் அப்பகுதி சேறும், சகதியுமாகி வாகனங்கள் செல்ல முடியவில்லை.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சூழ்ந்த மழை நீர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்திமதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக சுற்றுச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சேதமடைந்த கார். படம்: ஆர்.அசோக். எஸ்.எஸ்.காலனி பாரதியார் மெயின் ரோடு, 4-வது, 5-வது தெரு, அவென்யூ தெரு, ஸ்டேட் பேங்க் ரோடு உள்பட இப்பகுதியில் உள்ள சாலைகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகளை மூடாததால் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமப்பட்டனர்.
நேற்று அதிகாலை 4 மணி முதல் பெய்த தொடர் மழையால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தண்ணீரை அப்புறப்படுத்தினர். நேற்று காலை வரை மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீ.) : சிட்டம்பட்டி- 43, மேலூர்- 47, விரகனூர்- 54, உசிலம்பட்டி- 61, பெரியார் பஸ்நிலையப் பகுதி- 53, சோழவந்தான்- 40, தனியாமங்கலம்- 68. நேற்று ஒரே நாளில் 844 மி.மீ. மழை பெய்துள்ளது.
மதுரையில் நேற்று முன் தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக சுற்றுச்சுவரின் ஒருபகுதி நேற்று காலை இடிந்து விழுந்தது. இதில் சுவருக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த வாகனம் சேதமடைந்தது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் 6 செமீ மழை பதிவானது. உசிலம்பட்டி அருகே குப்பணம் பட்டியில் மழையால் பாண்டி, சமுத்திரம் ஆகியோரின் வீட்டுச் சுவர்கள் இடிந்தன. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உசிலம்பட்டி வண்டிப்பேட்டைத் தெருவில் மின் கம்பி திடீரென அறுந்து விழுந்தது. மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சரி செய் யும் பணியில் ஈடுபட்டனர்.