

தூத்துக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி மக்கள் திண்டாடும் நிலை தொடர்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 10 நாட்கள் மழை பெய்தபோது, குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டது.
ஆனால், கடந்த 25-ம் தேதி கொட்டிய கனமழையால் தூத்துக்குடி மாநகரத்தின் நிலை படுமோசமாகியது. நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதன்பின் நான்கு நாட்கள் பெரிய அளவில் மழை இல்லை. அவ்வப்போது லேசான சாரல் மட்டுமே பெய்தது. குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் கவனம் செலுத்தின.
370 மோட்டார் பம்புகள்
டேங்கர் லாரிகள், 370 மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகள் 24 மணி நேரமும் நடைபெற்றது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் மழைநீர் ஓரளவுக்கு வடிந்தது. முத்தம்மாள் காலனி, ராம் நகர், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர், தனசேகரன் நகர், பிரையண்ட் நகர், சிதம்பரநகர், ராஜீவ் நகர், கதிர்வேல் நகர் பகுதிகளில் மட்டும் மழைநீர் வடியவில்லை.
இதற்கிடையே நேற்றுமுன்தினம் இரவில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் விடிய விடிய மீண்டும் கனமழை பெய்தது. இதனால் மீண்டும் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் தேங்கி, திரும்பவும் மோட்டார்களை வைத்து வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளைச் சூழ்ந்து இடுப்பளவுக்கு தண்ணீர் நிற்பதால் ராம் நகர், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர் மக்கள் கடந்த 7 நாட்களாக வெளியில் வரமுடியவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர்.
மழைநீரை வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்த மேலும் 60 மோட்டார்கள் கோவையில் இருந்து புதிதாக வாங்கப்பட்டு, நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டன. இந்த மோட்டார்களை தண்ணீர் தேங்கிய பகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணிகளை அமைச்சர் பெ.கீதாஜீவன், ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் சாரு ஆகியோர் பார்வையிட்டனர். மாநகராட்சி பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக இருப்பதால், மக்கள் குடிநீரில் போட்டு பயன்படுத்துவதற்காக குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இந்த பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
400 வீடுகள் சேதம்
மழைக்கு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 400 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதில் 10 வீடுகள் முழுமையாகவும், மீதம் உள்ள வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
நிரந்தர தீர்வே நிவாரணம்
“தூத்துக்குடி மாநகரம் பாதிப்பை சந்திப்பது இது முதல் முறை அல்ல. பல ஆண்டுகளாக இந்நிலை தொடர்கிறது. மக்களின் வேதனையும் தொடர்கிறது. நிரந்தர தீர்வு ஒன்றே மக்களுக்கான நிவாரணமாக இருக்கும். அதைத் தான் மக்களும் எதிர்பார்க்கின்றனர். இனியாவது அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்” என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
வீடுகளை காலி செய்யும் நிலை- மறியல்
மழைநீரோடு பாம்பு, பூரான் போன்ற விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பலர் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு, உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
“ பல பகுதிகளில் பம்பிங் ஸ்டேஷனில் உள்ள மோட்டார் ஓடவில்லை. கடந்த 7 நாட்களாக கடும் அவல நிலையில் வாழ்கிறோம்” என, ரஹ்மத் நகரைச் சேர்ந்த கே.அகமது அலி தெரிவித்தார்.
முத்தம்மாள் காலனி பகுதியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் பேருந்துகளை பழுது பார்த்தல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் ஒரு வாரமாக தடைபட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த பகுதியில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பெரும்பாலான வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துவிட்டன. தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற கோரி அப்பகுதி மக்கள் நேற்று தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தூத்துக்குடி அம்பேத்கர் நகர் பகுதி மக்களும் சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர்.