

வேலூர் மற்றும் ஓசூரில் விஜிலென்ஸ் போலீஸார் நடத்திய சோதனையில் 2.27 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் செயற்பொறியாளர் ஷோபனா, 26 நாட்களுக்குப் பிறகு இன்று கைது செய்யப்பட்டார்.
வேலூரில் உள்ள தந்தை பெரியார் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பொதுப்பணித்துறை வேலூர் கோட்டத் தொழில்நுட்பக் கல்விச் செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கட்டப்படும் அனைத்து வகை அரசுக் கல்லூரிகளின் கட்டிடங்களுக்கு ஒப்பந்தம் வெளியிடுவது, பணிகளைப் பார்வையிடுவது, நிதியை விடுவிப்பது மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்குத் தடையில்லாச் சான்று வழங்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு செயற்பொறியாளராகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஷோபனா (57) என்பவர் பணியாற்றி வந்தார்.
இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கட்டிட ஒப்பந்ததாரர்களிடம் பணம் வசூலிப்பதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கிருஷ்ணராஜ் தலைமையிலான குழுவினர் அரியூர் சாலையில் நின்றுகொண்டிருந்த அவரது வாகனத்தை நவம்பர் 2ஆம் தேதி இரவு சோதனைக்கு உட்படுத்தினர். இதில், ஷோபனாவின் பையில் இருந்த ரூ.5 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மாவட்ட அலுவல் ஆய்வுக்குழு துணை அலுவலர் முருகன் அளித்த புகாரின் பேரில் ஷோபனா மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு அருகில் உள்ள பொதுப்பணித்துறை கட்டிடத்தில் ஷோபனா தங்கியிருந்த அறையில் நவம்பர் 3ஆம் தேதி அதிகாலையில் விஜிலென்ஸ் போலீஸார் நடத்திய சோதனையில் மேலும், ரூ.15.85 லட்சம் பணம், ரூ.4 லட்சம் மதிப்புள்ள 3 காசோலைகள், அலுவலகம் தொடர்பான 18 ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேரு நகரில் உள்ள ஷோபனாவின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். இதில் ரூ.2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் பணம், 38 பவுன் தங்க நகைகள், 11 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், 1.3 கிலோ வெள்ளிப் பொருட்கள், பல்வேறு வங்கிகளில் ரூ.27.98 லட்சத்துக்கான வைப்பு நிதி ஆவணங்கள், 14 சொத்துப் பத்திரங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மற்றும் ஓசூர் சோதனையில் ரொக்கப் பணமாக மட்டும் மொத்தம் ரூ.2.27 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஷோபனா மீது விஜிலென்ஸ் வழக்குப் பதிவான நிலையில் அவர் மீது பொதுப்பணித்துறை நிர்வாகம் துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சில நாட்களுக்கு முன்பு திருச்சிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், வழக்கின் விசாரணைக்காக ஷோபனாவை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் ஓசூரில் இருந்து வேலூருக்கு இன்று (நவ.30) காலை அழைத்து வந்தனர். சுமார் 5 மணி நேர விசாரணைக்குப் பிறகு அவரைக் கைது செய்தனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப்பிரிவு அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘ரூ.2.27 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக துணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையிலான போலீஸார் ஷோபனாவைக் கைது செய்துள்ளனர்’’ என்று தெரிவித்தனர்.