

வேலூரில் மழையால் சேதமடைந்த சாலைகளை விரைவாகச் சீரமைக்க வேண்டும், வரும் 12-ம் தேதி வீதி வீதியாகச் சென்று ஆய்வு நடத்துவேன் என அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்தார்.
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாநகராட்சி அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வேலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் தற்போது எந்த நிலையில் உள்ளன, அவற்றை விரைந்து முடிக்க வேண்டியது குறித்த ஆலோசனைகளை அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
"வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் முடிவடைந்து இருக்க வேண்டும். ஆனால் தற்போது 70 சதவீதப் பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. ஒப்பந்தம் எடுத்தவர்கள் சரியாக வேலை செய்யாததால் பணிகள் தாமதமாகி இன்னனும் முடியாமல் உள்ளன.
ஒப்பந்ததாரர் பெரிய நிறுவனம் என்பதால் அவர்களுக்குப் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பணிகளை அவர்கள் செய்யாமல் வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளனர். இதனால், அவர்களது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது. அவர்களும் விதிமுறைகளை மீறி வேறு ஒரு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளித்துள்ளனர். இதனால், வேலூர் மாநகராட்சியில் ஒரு தெரு கூட சேறும், சகதியும் இல்லாமல் இல்லை. குறிப்பாக காட்பாடி பகுதியில் அதுவும் வி.ஜி.ராவ் நகர் பகுதியின் உள்ளே நுழையக்கூட முடியவில்லை. இதையெல்லாம் ஆய்வு செய்துள்ளோம்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதலில் ஒருவர் குழியைத் தோண்டுவது, பின்னர் அங்கு சாலை போடுவது, பிறகு வேறொருவர் மீண்டும் அதே இடத்தில் பள்ளம் தோண்டுவது என ஏனோ தானோ என்று பணிகள் நடந்துள்ளன.
இப்பணிகளை முடிப்பது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தியுள்ளோம். இதில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், இதுவரை முடிக்கப்பட்ட பணிகள் என்ன? முடிக்க வேண்டிய பணிகள் என்ன? என்பது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு அதற்கான தீர்வு குறித்து ஆலோசனை வழங்கியுள்ளோம். அதன்படி பணிகள் நடைபெறும்.
வரும் 12-ம் தேதி மாநகராட்சிப் பகுதியில் வீதி வீதியாகச் சென்று ஆய்வு செய்ய உள்ளேன். பழைய மாதிரி தெருக்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாநகராட்சி ஆணையாளரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆட்சியர் அதைத் தொடர்ந்து கண்காணிப்பார்.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க முடியாது எனக் கூறினார்கள். ஆனால் அதனையும் மீறி 142 அடி தண்ணீரை நிரப்பிக் காட்டி நாங்கள் சாதனை படைத்துள்ளோம்’’.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
அப்போது, வேலூர் மாநகராட்சி ஆணையாளர் அசோக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பாபு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.