

பண்ருட்டி அருகே வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துதர தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் பார்வையிட்டு, தொடர் மழையால் பாதிப்புக்குள்ளாகியிருந்த மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு உணவு, உடை மற்றும் படுக்கை விரிப்புகளை வழங்கினார்.
அப்போது பண்ருட்டி அருகே அங்குச்செட்டிப் பாளையத்தில் வசிக்கும் பழங்குடியினர் குடியிருப்புப் பகுதிக்குச் சென்று அவர்களின் வசிப்பிடங்களைப் பார்வையிட்டு, அவர்களின் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் வசதி, தெருவிளக்கு, சாலை வசதிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அவர்களுக்கு சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, அரசின் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறதா எனக் கேட்டறிந்து, உடனடியாக அவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க முகாம் நடத்திட பண்ருட்டி வட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் அப்பகுதி மக்களின் குடியிருப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் தார்ப்பாய்களையும் வழங்கிவிட்டுச் சென்றார். அப்போது பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் தி.வேல்முருகன் உடனிருந்தார்.