வீரமரணமடைந்த 3 ராணுவ வீரர்கள்; வாரிசுதாரர்களுக்கு நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

வீரமரணமடைந்த 3 ராணுவ வீரர்கள்; வாரிசுதாரர்களுக்கு நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
Updated on
1 min read

ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்குத் தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (30.11.2021) தலைமைச் செயலகத்தில், ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களை நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்து, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து அவர்களது குடும்பத்தினருக்குத் தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த படைவீரர் கே.ஏகாம்பரத்தின் மனைவி இ.குமாரி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தைச் சேர்ந்த படைவீரர் கே.கருப்பசாமியின் மனைவி ஆர்.தமயந்தி, தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த படைவீரர் பி.பழனிகுமாரின் மனைவி ஜி.பாண்டியம்மாள் ஆகியோருக்கு முதல்வர் கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

மேலும், லடாக் - காரகோரம் கணவாயிலிருந்து மலரி வரை (ஜோஷிமத், உத்ரகாண்ட் மாநிலம்) பனிச்சறுக்கு மூலம் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற குழுவில் பங்கேற்ற முதல் தமிழ்நாட்டு ராணுவ வீரரான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கேப்டன் எஸ்.குபேர காந்திராஜின் (IC-80931P) சாதனையை கௌரவித்து முதல்வர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்வில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, பொதுத்துறைச் செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன், பொதுத்துறை சிறப்புச் செயலாளர் வி. கலையரசி, ஆகியோர் கலந்துகொண்டனர்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in