Last Updated : 30 Nov, 2021 02:54 PM

 

Published : 30 Nov 2021 02:54 PM
Last Updated : 30 Nov 2021 02:54 PM

ஆப்பிரிக்காவிலிருந்து புதுச்சேரி வந்த மூவர் தொடர் கண்காணிப்பு; வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்குக் கட்டுப்பாடுகள்: ஆளுநர் தகவல்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்.

புதுச்சேரி

ஆப்பிரிக்காவிலிருந்து புதுச்சேரி வந்த மூவர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவோருக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

புதுச்சேரியில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் பணியைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ராஜா நகரில் ஆய்வு செய்தார். ஏன் இவ்வளவு நாள் தடுப்பூசி போடவில்லை என்று அவர் விசாரித்தபோது சிலர் பயம் என்று குறிப்பிட்டனர். ஆளுநர் அழைத்ததால் வந்து தடுப்பூசி போட்டனர்.

இதுகுறித்து ஆளுநர் தமிழிசை கூறியதாவது:

"ஒமைக்ரான் - புதிய வகை வைரஸ் பற்றிக் கூட்டம் நடத்தினோம். புது வகை வைரஸை எதிர்கொள்ளத் திட்டம் தீட்டியுள்ளோம். இதுவரை பயம் இல்லை. ஆப்பிரிக்காவிலிருந்து புதுச்சேரிக்கு வந்த 3 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.

வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவோருக்கு எல்லையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. குறிப்பாக இரண்டு தடுப்பூசி சான்றுகளைச் சரிபார்த்தும், பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கவும் ஆலோசித்துள்ளோம்.

பொது இடங்களில் கூட்டம் உள்ள இடங்களில் வருவோருக்கு இரண்டு தடுப்பூசி போட்ட ஆவணங்கள் அவசியம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்த ஆலோசித்துள்ளோம். அனைத்து வைரஸ்களுக்கும் பதில் தடுப்பூசி மட்டும்தான். புது வைரஸிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி அவசியம்.

அரசு மூலம் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் தயார் நிலையிலும், படுக்கை, ஆக்சிஜன், வென்டிலேட்டர் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் கூறியுள்ளோம். இன்னும் தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். வரும் டிசம்பர் 4, 5-ம் தேதிகளில் "உங்க ஏரியாவுக்கு நாங்க வர்றோம்" எனக் குறிப்பிட்டு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும்".

இவ்வாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x