

கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. மொத்த விலை விற்பனையில் கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது. தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அப்பகுதிகளில் விளைவிக்கப்பட்ட தக்காளிச் செடிகள் மழையில் அழுகின. இதன் காரணமாக தக்காளி உற்பத்தி குறைந்து, சந்தைக்கு வரத்தும் குறைந்தது. இதனால் விலை உயரத் தொடங்கியது. கடந்த வாரம் ரூ.110 வரை விற்கப்பட்டது.
பின்னர் அரசு சார்பில் பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ ரூ.79-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.40 வரை குறைந்தது. வெளிச் சந்தைகளில் தரத்துக்கு ஏற்ப கிலோ ரூ.30 முதல் ரூ.60 வரை விற்கப்பட்டது.
இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் நேற்று மீண்டும் தக்காளி விலை உயர்ந்து கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டு வருகிறது. வெளிச் சந்தைகளில் கிலோ ரூ.40 முதல் ரூ.70 வரை, தரத்துக்கு ஏற்ப விற்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறும்போது, "கடந்த சில தினங்களாக வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரவழைத்து விற்பனை செய்யப்பட்டது. அதில் நஷ்டமே ஏற்பட்டது. அதனால் வழக்கமாக வரும் சரக்கு அடிப்படையில் வியாபாரம் செய்து வருகிறோம். வரத்து குறைவாக உள்ள நிலையில் தேவை அதிகமாக இருப்பதால் விலை உயர்ந்துள்ளது" என்றார்.