

திருக்கோவிலூர் அருகே தரைப்பாலத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டது. அதில் இருவர் நீச்சலடித்துத் தப்பித்துவிட, காரை ஓட்டிய உரிமையாளர் மட்டும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைத் தேடும் பணி இரண்டாவது நாளாகத் தீவிரமாக நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது பழங்கூர் கிராமம். இந்த கிராமத்தையும், உளுந்தூர்பேட்டை தாலுகா கிளியனூர் கிராமத்தையும் இணைக்கும் வகையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே ஆலூர் கிராமத்தில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்த தரைப்பாலத்தில் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக ஆலூர் - பழங்கூர் கிராமத்திற்கு இடையே தரைப்பாலத்தின் மேல் வெள்ள நீர் செல்கிறது. இந்த நிலையில் கிளியனூர் கிராமத்தைச் சேர்ந்த கிளியன் (50), முருகன் (42), சங்கர் (47) ஆகிய மூன்று நபர்களும் காரில் தரைப் பாலத்தைக் கடக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது ஆற்றில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், கிளியன் மற்றும் சங்கர் ஆகிய இருவரும் காரில் இருந்து வெளியேறி நீச்சல் அடித்துக் கொண்டு தப்பிவிட்ட நிலையில், காரை ஓட்டிச் சென்றவரும் அதன் உரிமையாளருமான முருகன் என்பவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது. பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு மீட்புக் குழுவினர் மற்றும் திருக்கோவிலூர் போலீஸார், நீரில் அடித்துச் செல்லப்பட்ட முருகனை நேற்று இரவு மூன்று மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
ஆனால், இரவு நேரம் என்பதாலும், போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தாலும் மீட்புப் பணி தாமதமானது. இந்த நிலையில் காலை இரண்டாவது நாளாக ஆற்றின் ஒரு கரையில் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு மீட்புக் குழுவினரும், மற்றொரு கரையில் திருக்கோவிலூர் தீயணைப்பு மீட்புக் குழுவினரும் என இரண்டு கரைகளிலும் தேடி வருகின்றனர்.
காலை 7 மணி முதல் தொடர்ந்து இரண்டு கரைகளிலும் தீயணைப்பு மீட்புக் குழுவைச் சேர்ந்த சுமார் 15க்கும் மேற்பட்டோர் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.