Published : 30 Nov 2021 11:25 AM
Last Updated : 30 Nov 2021 11:25 AM

அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முடிவை கைவிடுக: முதல்வருக்கு ஈபிஎஸ் வலியுறுத்தல்

அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முயற்சியினை கைவிட்டுவிட்டு, அங்கு பணிபுரியும் அனைத்து மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகமெங்கும் கிராமப்புறங்களில் வாழும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்கள், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும்.

இதனால் அவர்கள் ஒருவேளை உணவையாவது வயிறார உண்ண வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் எம்ஜிஆர். அப்படி படிக்கும் மாணவச் செல்வங்கள் பசியால் பாதியில் தங்கள் படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்று அனைத்து மாணவர்களுக்கும் உணவளிக்க உத்தரவிட்டார் எம்ஜிஆர்.

சத்துணவுத் திட்டத்தை கேலி பேசிய அப்போதைய திமுக தலைவர், 1989-ஆம் ஆண்டு முதல்வரானவுடன் தொடர்ந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தினார்.

அதுபோலவே, எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆகியோர் தமிழக மக்களுக்கு செயல்படுத்திய பல மக்கள் நலத் திட்டங்களை மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள், தாலிக்குத் தங்கம், இலவச சீருடை, விலையில்லா மின்சாரம், தொட்டில் குழந்தைத் திட்டம் போன்ற பல திட்டங்களை மறைந்த திமுக தலைவர் முதல்வரான பின்னரும் தொடர்ந்து செயல்படுத்தினார்.

ஆனால், இந்த திமுக அரசு பதவியேற்றதில் இருந்து, ஜெயலலிதாவின் அரசும் செயல்படுத்திய பல மக்கள் நல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தி வருகிறது.
அம்மா பல்கலைக்கழகம், விழுப்புரம்; அம்மா உணவகம் (மளிகைப் பொருட்களை குறைவாக வழங்குதல், பணியாளர்களை குறைத்தல், ஊதியத்தைக் குறைத்தல், ஒருசில இடங்களில் அம்மா உணவகத்தின் பெயர் பலகைகளை மாற்றி வைத்தல்.); தாலிக்குத் தங்கம் (புதிய விதிமுறைகளை புகுத்துதல்); அம்மா இருசக்கர வாகன திட்டத்தை கைவிடுதல்; அம்மா குடிநீர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

தற்போது, அம்மா மினி கிளினிக்கை மூடும் விதமாக அங்கு பணிபுரியும் சுமார் 1820 மருத்துவர்களையும், மற்றும் 1420 மருத்துவப் பணியாளர்களையும் எதிர்வரும் 4.12.2021 முதல் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வந்துள்ளது.
அம்மா மினி கிளினிக் திட்டம் என்பது நகரம் மற்றும் கிராமப் புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே சிகிச்சை அளிக்கப்படும் ஒரு அற்புதமான திட்டம் ஆகும். இது, மக்களால் மிகுந்த வரவேற்பைப் பெற்ற திட்டம்.

அதிமுக அரசு கொண்டுவந்த அப்படிப்பட்ட ஒரு சிறந்த திட்டத்தை இந்த விடியா அரசு நிறுத்த நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இந்த அரசு பொறுப்பேற்ற நேரத்தில், தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று மிக அதிகமாக பரவி இருந்தது. அதனைக் கட்டுப்படுத்த, இந்த விடியா அரசு, அம்மா மினி கிளினிக் மருத்துவர்களை முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டது.

கரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள காலத்திலும், தங்களது உடல்நிலையினை கருத்தில் கொள்ளாமல், உண்மையான மருத்துவர்கள் என்ற முனைப்போடு பணியாற்றி, கரோனா நோய்த் தொற்றை இன்று, மூன்று இலக்க எண்ணிக்கையில் கட்டுக்குள் கொண்டு வந்த அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை இந்த திமுக அரசு, வரும் டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி முதல் பணி நீக்கம் செய்ய உள்ளது என்ற சமூக வலைதளச் செய்தி என்னை மிகவும் அதிர்ச்சிஎன்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும், இந்த பணி நீக்கச் செய்தி, அம்மா மினி கிளினிக்கில் பணிபுரியும் மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையினையும், மன உறுதியினையும் தகர்க்கும் வண்ணம் உள்ளது.

அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முயற்சியினை கைவிட்டுவிட்டு, அம்மா மினி கிளினிக்குகளில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும், மக்களின் உடல் நலத்தோடும், அவர்களின் வாழ்க்கையோடும், உயிரோடும் விளையாடுவதை உடனே கைவிட வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x