Published : 30 Nov 2021 10:28 AM
Last Updated : 30 Nov 2021 10:28 AM

காய்கறிகளுக்கு விலை நிர்ணயித்து, அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை

தமிழகத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு கொள்முதல் விலை நிர்ணயித்து, அரசே கொள்முதல் செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையால் காய்கறிகளுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடும், விலை உயர்வும் இரு வேதனையான உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளன.

காய்கறிகளின் விலை உயர்வு மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியிருக்கிறது; அதே நேரத்தில் உழவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பது தான் வேதனையளிக்கும் அந்த உண்மைகள்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர்கள் சேதமடைந்தன. அதனால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒரு கிலோ தக்காளி ரூ.180 வரை விற்பனையானது. பெரும்பான்மையான காய்கறிகளின் விலை கிலோ ரூ.100-க்கு மேல் உயர்ந்தன. கடந்த சில நாட்களில் காய்கறிகளின் விலை சற்று குறைந்தாலும் கூட, இன்னும் சில்லறை விற்பனையில் தக்காளி உள்ளிட்ட பல காய்கறிகளின் விலை கிலோ ரூ.100க்கும் கூடுதலாகத் தான் உள்ளது. தமிழக அரசின் கூட்டுறவுத் துறை பண்ணை பசுமைக் கடைகளில் கூட தக்காளி ரூ.80 என்ற விலையில் தான் விற்கப்படுகிறது.

ஆனால், காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகளுக்கு இந்த விலை உயர்வால் எந்த பயனும் இல்லை. மாறாக பாதிப்புகள் தான் அதிகமாகின்றன. ஒரு கிலோ தக்காளி வெளிச்சந்தையில் ரூ.150 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டபோதிலும் கூட விவசாயிகளுக்கு ரூ.30 முதல் ரூ.35 வரை மட்டுமே கிடைத்தது.

இந்த விலை ஒப்பீட்டளவில் அதிகம் போன்று தோன்றினாலும் கூட, அதனால் விவசாயிகளுக்கு எந்த லாபமும் இல்லை. சாதாரண காலத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.25 வரை வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டால், விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.5 வரை கொள்முதல் விலை கிடைக்கும்.

ஆனால், தட்டுப்பாடு காலத்தை விட அப்போது குறைந்தது 20 மடங்கு வரை கூடுதலாக விளைச்சல் கிடைக்கும். அதனால், அப்போது ரூ.100 வருவாய் ஈட்டிய விவசாயிகளுக்கு இப்போது ரூ.35 மட்டுமே கிடைக்கிறது. மாறாக பொதுமக்கள் 5 மடங்கு வரை அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது.

பொதுமக்களிடமிருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட விலை இடைத்தரகர்களுக்குத் தான் செல்கிறது. விவசாயிகளுக்குச் செல்லவில்லை. இந்த நிலையை மாற்றுவதற்காகத் தான் அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்; அவற்றுக்கு நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும்; அதற்காக வேளாண் விளைபொருட்கள் விலை நிர்ணய ஆணையம், வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் ஆணையம் ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தான் விவசாயிகளின் துயரைத் துடைக்கும்.

காய்கறிகளுக்கு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து, அவற்றை கொள்முதல் செய்து மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதை கேரள அரசு சாத்தியமாக்கியிருக்கிறது. கேரளத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 16 காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

மாவட்ட வாரியாக காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான சாகுபடி செலவு கணக்கிடப் பட்டு, அத்துடன் 20% லாபம் சேர்த்து கொள்முதல் விலை தீர்மானிக்கப்படும். விளைபொருட்களை கேரள அரசின் காய்கறிகள் மற்றும் பழங்கள் மேம்பாட்டுக் குழுவும், அரசிடம் பதிவு செய்து கொண்ட தனியார் நிறுவனங்களும் வாங்கி நியாய விலையில் விற்பார்கள். அதனால், உழவர்களுக்கு நியாயமான விலை கிடைக்கும், மக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்கும் என்பது தான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

கேரள அரசின் இந்தத் திட்டம் இப்போது மிகச்சிறப்பாக பயனளித்திருக்கிறது. தக்காளி அதிகமாக விளையும் தமிழ்நாட்டில் ஒரு கிலோ ரூ.180 வரை விற்கப்பட்ட நிலையில், கேரள அரசின் காய்கறிகள் மற்றும் பழங்கள் மேம்பாட்டுக் குழு விற்பனை நிலையங்களில் வெறும் ரூ.56க்கு விற்கப்பட்டிருக்கிறது. அதில் பெரும்பகுதி விவசாயிகளுக்கு கொள்முதல் விலையாக வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக தக்காளி கொள்முதல் விலை ரூ.8 என்றாலும் இப்போது அதை விட பல மடங்கு அதிக விலை வழங்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், மக்கள் என இருவரும் பயனடைந்துள்ளனர். இது தான் இன்றையத் தேவையாகும்.

தமிழ்நாட்டில் கரோனா பரவல் காலத்தில் தோட்டக்கலைத்துறை விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்முதல் செய்து மக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்தது. அந்த அனுபவத்தின் உதவியுடன் தோட்டக்கலைத் துறையால் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியும்.

இத்தகையத் திட்டம் தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்படும் போது, சந்தையில் விற்கப்படுவதை விட ஐந்தில் ஒரு மடங்கு தொகை மட்டுமே விவசாயிகளுக்கு கொள்முதல் விலையாக வழங்கப்படும் நிலை மாறும். ஒவ்வொரு காய்கறிக்கும் உறுதி செய்யப்பட்ட விலை கிடைப்பதால், அதிகம் விளையும் போது போதிய விலை கிடைக்காமல் காய்கறிகளை குப்பையில் கொட்டும் நிலையும், அறுவடை செய்யாமல் செடிகளிலேயே வாட விடும் நிலையும் மாறும்.

எனவே, தமிழ்நாட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு கொள்முதல் விலை நிர்ணயித்து, அரசே கொள்முதல் செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x