Published : 27 Jun 2014 03:14 PM
Last Updated : 27 Jun 2014 03:14 PM

பாளை. சிறையில் அறுவடைத் திருவிழா: ஹெக்டேருக்கு 8,000 கிலோ நிலக்கடலை விளைவித்து சாதனை

ஹெக்டேருக்கு 8,000 கிலோ நிலக்கடலை அறுவடை செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறைவாசிகள் சாதனை புரிந்துள்ளனர். இது வழக்கமான மகசூலை விட இருமடங்கு அதிகம்.

பாபா அணு ஆராய்ச்சி மையம் கதிரியக்கம் மூலம் உற்பத்தி செய்த `டிஜி 37 ஏ’ என்ற வீரிய ரக நிலக்கடலை பரிசோதனை அடிப்படையில், சிறை வளாகத்திலுள்ள 2.25 ஹெக்டேரில் 15.3.2014-ம் தேதி விதைக்கப்பட்டது. வியாழக்கிழமை அறுவடைப் பணியில் சிறைவாசிகள் ஈடுபட்டனர். வழக்கமாக நிலக்கடலை செடியில் 25 முதல் 30 வரை காய்கள் காய்க்கும். இந்த வீரியவகை நிலக்கடலை பயிரில் மூடுக்கு 60 காய்கள் விளைந்திருந்தன.

அறுவடைத் திருவிழாவில் பங்கேற்ற, மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி ஜெ.டேனியல் செல்லப்பா கூறியதாவது:

கடந்த 2004-ம் ஆண்டில் மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தால் வெளியிடப்பட்ட `டிஜி 37 ஏ’ நிலக்கடலை பயிர் நாடு முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது. விதை குருத்து அழுகல் மற்றும் வளைய தேமல் நோய் எதிர்ப்பு கொண்ட இந்த ரகம், அதிக விளைச்சல் தரக்கூடியது. வறட்சியைத் தாங்கக் கூடியது. எல்லா பருவத்துக்கும் ஏற்ற ரகம். தோட்டக்கால்களில் பயிரிடும்போது 100 நாள்களிலும், மானாவாரி நிலங்களில் 110 நாள்களிலும் அறுவடை செய்யலாம்.

எண்ணெய் திறன் அதிகம்

லேசான ரோஸ் நிறத்துடன் கூடிய திரட்சியான கொட்டைகள், 48 சதவிகிதம் எண்ணெய் திறனும், 23 சதவிகிதம் புரதச் சத்தும் உடையது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ், இவற்றை விவசாயிகளுக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் வந்தால், அவர்களுக்கு அந்த விதைகளை வழங்குகிறோம். இதன் மூலம் விவசாயிகள் அதிக மகசூல் பெற்று, வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும் என்றார் அவர்.

சிறைவாசிகளின் உழைப்பு

மத்திய சிறை கண்காணிப்பாளர் ரா.கனகராஜ் கூறியதாவது:

இத்தகைய முயற்சியில் சிறைப் பணியாளர்களும், சிறைவாசிகளும் ஈடுபட்டது பாராட்டுக்குரியது. தரிசு நிலத்தை பண்படுத்தி, உழைப்பை செலுத்தி 2 மடங்கு மகசூல் பெற்றிருக்கிறார்கள். இங்கு அறுவடை செய்யப்படும் நிலக்கடலை அனைத்தும் விதையாகவே பயன்படுத்த உள்ளோம். கோவை, சேலம், திருச்சி, சென்னை மத்திய சிறைகளில், இவை பயிரிடப்படும்.

சிறைத்துறை தலைவர் அனுமதி அளித்தால், திருநெல்வேலி மாவட்ட உள்ளூர் விவசாயிகளுக்கும் விதையாக அளிக்க இருக்கிறோம். சிறைவாசிகள், சமூகத்துக்கு ஆற்றும் பணியாகவே இத்தகைய விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள், என்றார் அவர்.

விவசாயி ஆச்சர்யம்

நிகழ்ச்சியில் பங்கேற்ற ராதாபுரம் பகுதி விவசாயி டி.செல்வராஜ், `எங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 20 முதல் 30 மூட்டை நிலக்கடலைதான் (1 மூட்டை 36 கிலோ) கிடைக்கும். இங்கு ஏக்கருக்கு 90 மூட்டை மகசூல் கிடைத்திருக்கிறது. நிலக்கடலை பருப்பும் திரட்சியாக உள்ளது’ என்று தெரிவித்தார்.

சாதாரண விவசாயிக்கு புதிய ரகம் கிடைக்குமா?

இவ்விழாவில் பங்கேற்ற பாளையங்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் மகாலிங்கம் மற்றும் வேளாண் அலுவலர் மாரியப்பன் ஆகியோர் `திருநெல்வேலி மாவட்டத்தில் ஹெக்டேருக்கு சராசரியாக ஹெக்டேருக்கு 2 முதல் 2.5 டன் தரக்கூடிய நிலக்கடலை உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இந்த வீரியவகை நிலக்கடலை ஹெக்டேருக்கு 5 மெட்ரிக் டன் மகசூல் தந்துள்ளது. இதனால், ஹெக்டேருக்கு ரூ. 2 லட்சம் வரை வருமானம் வரும்’ என ஆச்சர்யம் தெரிவித்தனர்.

தண்ணீர் பற்றாக்குறையால் தென் மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் மட்டத்திலான அதிகாரிகள், இத்தகைய வீரிய வகை பயிர் ரகங்களை, விவசாயிகள் கைக்கு எட்டச் செய்வது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x