Published : 30 Nov 2021 03:07 AM
Last Updated : 30 Nov 2021 03:07 AM

குறுக்கு வழியில் சம்பாதித்தால் சிக்கிக் கொள்வீர்கள்: அரசு அலுவலர்களுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவுறுத்தல்

அரசுப் பணியாளர்களுக்கான அடிப்படைப் பயிற்சி முகாமை சென்னையில் நேற்று தொடங்கிவைத்து, பணியாளர்களுக்கு பயிற்சிக் கையேட்டை வழங்கினார் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன். உடன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, மனிதவள மேலாண்மைத் துறைச் செயலர் மைதிலி ராஜேந்திரன், சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி உள்ளிட்டோர். படம்: ம.பிரபு

சென்னை

நேர்மை தவறி, குறுக்கு வழியில் பணம் சம்பாதித்தால் சிக்கிக் கொள்வீர்கள் என்று அரசு அலுவலர்களுக்கு நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவுறுத்தினார்.

அரசுப் பணியில் புதிதாக சேரும்பணியாளர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே அடிப்படைப் பயிற்சி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, அண்ணா நிர்வாகப் பணியாளர்கள் கல்லூரி, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சிநிலையம் சார்பில், முதல்கட்டமாகச் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 250 அரசு அலுவலர்களுக்கான பயிற்சி அண்ணா நகரில் உள்ளகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது.

மொத்தம் 37 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமை நேற்று தொடங்கிவைத்து, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:

அரசுப் பணி மக்களின் வாழ்க்கையில் ஏற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளைக் கொண்டது. நாம் அனைவரும் மக்களுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள்.

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம், யார் வேண்டுனாலும் தகவல்களைக் கேட்கலாம். மேலும், தற்போது ஒரு அரசாணை வெளியாகும் முன்பே, வாட்ஸ்அப்பில் வெளியாகி விடுகிறது. எனவே, கோப்புகளைக் கையாளும்போது கவனமாக இருக்கவேண்டும்.

அலுவலர்கள் யாருக்கும் வளைந்து கொடுக்கக் கூடாது.விதிமுறைகளைப் பின்பற்றி,நேர்மையாகவும், உண்மையாக வும் செயல்படவேண்டும்.

அரசு அலுவலர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைக்கிறது. நேர்மை தவறி, குறுக்கு வழியில் சம்பாதித்தால் நிச்சயம் சிக்கிக் கொள்வீர்கள். அதேபோல, பாதிக்கப்பட்டவரின் இடத்திலிருந்து யோசித்து, நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, மனிதவள மேலாண்மைத் துறை செயலர் மைதிலி க.ராஜேந்திரன், சென்னை ஆட்சியர் ஜெ.விஜயா ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x