

கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த மைதானம் ஏற்கெனவே மூடப்பட்டது.
இந்த மைதானத்தை திறந்து விடக் கோரி கோயம்பேடு மார்க்கெட் தந்தை பெரியார் தக்காளிமொத்த வியாபாரிகள் சங்கத்தலைவர் சாமிநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், சிறிய கடைக்காரர்கள் வாகனங்களை நிறுத்த இடமின்றி காலியாக கிடந்த மைதானத்தை பயன்படுத்தி தக்காளி கூடைகளை இறக்கி, ஏற்றி வந்ததாகவும், ஆனால் சிஎம்டிஏ அதிகாரிகள் திடீரென அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதி மறுத்து விட்டதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவேவிசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், ‘‘தொடர்மழை மற்றும் தக்காளி விலையேற்றத்தைக் கருத்தில்கொண்டு மூடப்பட்டிருக்கும் மைதானத்தை திறந்துவிட முடியுமா? என்பது குறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு இருந்தார்.
தக்காளி விலை குறையும்
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பாகநேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.சிவக்குமார் ஆஜராகி, ‘‘மனுதாரர் சங்கம் குறிப்பிடும் இடத்தை வாகனங்களுக்கு ஒதுக்கிக் கொடுத்தால் தக்காளி வரத்து அதிகரித்து, விலை குறையும். மேலும் அந்த இடம் தக்காளி லோடுகளை இறக்கி, ஏற்ற மட்டுமே பயன்படுத்தப்படும். ஒருபோதும் அங்கு விற்பனை நடைபெறாது’’ என உறுதியளித்தார்.
ஆனால் சிஎம்டிஏ, கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி தரப்பில், ‘‘ஏற்கெனவே 8 இடங்களில் 800 வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு வசதி உள்ளது. லாரிகளை நிறுத்தஅனுமதிக்காததால்தான் தக்காளி விலை உயர்ந்து விட்டதாக மனுதாரர் சங்கம் கூறுவது தவறு. அனுமதிக்கப்பட்ட விற்பனையாளர்கள் யாரும் தடுக்கப்படவில்லை. கடந்த வாரத்தைவிட தக்காளி விலை தற்போது குறைந்து வருகிறது’’ என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘தொடர் மழை மற்றும் வெளிமாநில வரத்து குறைவு காரணமாக தக்காளி விலைஉயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், கோயம்பேடு மார்க்கெட்டில்வியாபாரிகள் லோடுகளை ஏற்றி,இறக்க நவ.30 (இன்று) அதிகாலை 4 மணி முதல் 4 வார காலத்துக்கு தற்காலிகமாக ஒரு ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் உடனடியாக ஒதுக்கி கொடுக்க வேண்டும்.
இந்த இடத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக் கூடாது. மனுதாரர் சங்கம் மட்டுமின்றி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வியாபாரிகளையும் இந்த இடத்தில் அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பாக இருதரப்பிலும் உள்ள சாதக, பாதகம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் டிச.15-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.