

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி பாஜக சார்பில், சென்னை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்அருகே நேற்று மாநில பொதுச் செயலர் கரு.நாகராஜன் தலைமையில் திரண்ட கட்சியினர், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி கோஷமெழுப்பினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களைத் தடுத்து நிறுத்தி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
முன்னதாக, கரு.நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பெட்ரோல், டீசல்விலையை குறைக்காமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக் கிறது. தமிழகத்தில் தனி ஒருவர், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு தமிழக அரசுக்கு வரியாக ரூ.20செலுத்தி வருகிறார். டீசலுக்கு ரூ.18 வரியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதைக் குறைக்கிறோம் என்று சொல்லி இப்போது ஏமாற்றுகிறார்கள்.
தமிழக அரசு வரி வசூல் செய்வதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரிந்தும் பொய் சொல்லி கொண்டிருக்கிறனர். எனவே, வாக்குறுதி கொடுத்தபடி பெட்ரோல், டீசல் விலையை தமிழகஅரசு குறைக்க வேண்டும், சமையல் காஸ் சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை ஏற்கும்வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.