

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, 4-வது முறையாக நேற்றிரவு 142 அடியை எட்டியதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1979-ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. அதன் பிறகு தொடர் சட்டப் போராட்டங்களின் பயனாக 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு 152 அடியாக நிலைநிறுத்தலாம் என்றும் தீர்ப்புஅளித்தது. இதன்படி 2014, 2015, 2018-ம் ஆண்டுகளில் 3 முறை 142 அடி உயரத்துக்கு நீர்மட்டம் நிலைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ‘ரூல்கர்வ்’ விதிமுறைகளின்படி நவ.30-ம் தேதிதான் 142 அடியாக உயர்த்த முடியும் என்பதால் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை நீர்மட்டம் 141.90 அடியை எட்டியது. நீர்வரத்து விநாடிக்கு 2,232 கனஅடியாகவும், வெளியேற்றம் 1,867 கனஅடியாகவும் இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு 4-வது முறையாக அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டிஉள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று (நவ.30) 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் உள்ள மணிமண்டபத்தில் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
மேலும் கம்பம், கூடலூர், உத்தமபாளையம் பகுதிகளில் இனிப்புவழங்கி கொண்டாட உள்ளதாக தலைவர் எஸ்ஆர்.தேவர், முதன்மைச் செயலாளர் சலேத்து,பொதுச் செயலாளர் பொன்காட்சி கண்ணன் ஆகியோர் கூறினர்.
கேரளாவில் தொடர் வதந்தி
அணையின் பலம் குறித்தும், தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரினால் கேரளப் பகுதியில் கடும் வெள்ளம் ஏற்படும் என்றும் தொடர்ந்து அம்மாநிலத்தில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இணையத்தில் இருக்கும் வெள்ளப் பாதிப்பு காட்சிகளை பதிவிறக்கம் செய்து முல்லை பெரியாறு அணைக்கு எதிரான மனோநிலையை அங்கு சிலர் ஏற்படுத்தி வருகின்றனர்.