

கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு போக்ஸோ சட்டத்தின்கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை வெள்ளலூர், காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் நாகமுத்து என்கிற பேச்சி(30). பெயின்டர். இவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்ளுவதாக கூறி, கடந்த 2018 ஆக.15-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமிக்கு திருமணம்
பின்னர், கருவுற்ற அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது. அந்த சிறுமியை நாகமுத்து திருமணம் செய்துகொண்டார்.
இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், தகராறு ஏற்படவே, சிறுமி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை போலீஸார் விசாரித்தபோது சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, போக்ஸோசட்டத்தின்கீழ் நாகமுத்து மீதுவழக்குப் பதிவு செய்த போலீஸார்,அவரை கடந்த 2019 ஜூலை 3-ம் தேதி கைது செய்தனர். மேலும், குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொண்டனர். அதில், அந்தக் குழந்தை நாகமுத்துவின் குழந்தைதான் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.குலசேகரன், நேற்று தீர்ப்பளித்தார். அதில், போக்ஸோ சட்டப்பிரிவு6-ன்கீழ் நாகமுத்துவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜி.குலசேகரன் தீர்ப்புஅளித்தார்.