

குலதெய்வ கோயிலுக்கு பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ள 7 வயது சிறுவனுக்கு கல்வி வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில், “நீலகிரி மாவட்டம், நெடுக்காடு எனும் கிராமத்தில் படுகர் இன மக்களின் குல தெய்வக் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலின் பூஜை உள்ளிட்ட விழாக்களை படுகர் இன மக்களே செய்து வருகின்றனர். அந்த கோயிலில் அதே கிராமத்தை சேர்ந்த 2-ம் வகுப்பு படித்துவந்த 7 வயது சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபோல பூசாரியாக நியமிக்கப்படும் சிறுவர்கள், பள்ளிக்கு செல்ல முடியாது. உணவை அவர்களே சமைத்து சாப்பிட வேண்டும். கோயில் பசுக்களின் பாலைக்கறந்து நெய் எடுத்து கோயில் விளக்குகளுக்குப் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட வயது வரை கோயில் வளாகத்தை விட்டு வெளியே வரக்கூடாது என கடுமையான ஐதீகங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.
இந்த செயல் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, அந்த சிறுவனுக்கு கல்வி வழங்கவும், சிறுவர்களுக்கான உரிமைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, அந்த இன மக்களின் மரபுப்படி பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ள அந்த சிறுவன் கோயிலை விட்டு வெளியில் வரக்கூடாது. தற்போது, தமிழகத்தில் வீடு தோறும் கல்வித்திட்டம் அமலில் உள்ளதால் அதன்படி அந்த சிறுவனுக்கும் தேவையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்” என்றார்.
அதையடுத்து அந்த சிறுவனுக்கு கல்வி வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வார காலத்துக்கு தள்ளி வைத்தனர்.