

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் தரைப்பாலங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இது மட்டும் இல்லாமல் ஆந்திரா மற்றும் தமிழக கரையோர பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி, பாலாற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை போன்ற பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக செய்யாற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக காஞ்சிபுரம் - அவளூர் தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சுமார் 20 நாட்களாக இந்தப் பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. தற்போது தண்ணீர் வற்றினாலும் வாகனங்கள் செல்ல முடியாதபடி அந்தப் பாலம் உடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
அதேபோல் செய்யாற்றின் குறுக்கே வெங்கச்சேரி பகுதியில் உள்ள தரைப்பாலமும் உடைந்த நிலையில் உள்ளது. இதனால் காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் - திண்டிவனம் செவிலிமேடு பகுதியில் உள்ள தரைப்பாலம் வெள்ளப் பெருக்கில் துண்டு துண்டாக உடைந்தது. ஆனாலும் அந்தப் பகுதியில் மேம்பாலம் இருப்பதால் போக்குவரத்து தடையின்றி நடைபெறுகிறது.