

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தம்பிபேட்டை பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை படகு மூலம் போலீஸார் மீட்டனர்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். சக்திகணேசன் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் அந்தந்த பகுதி காவல்துறையினர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மண்வெட்டி, கடப்பாறை, கயறு, மரம் அறுக்கும் கருவி மற்றும் பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
மேலும் தற்போது பெய்து வரும் கன மழையில் அந்தந்த காவல் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (நவ.29) குறிஞ்சிப்பாடி அருகே செங்கால் ஓடை வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் தம்பிபேட்டை காலனி பகுதியில் மழை, வெள்ள நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸாருக்கு தகவல் தரப்பட்டது.
குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் போலீஸார் மற்றும் மீட்பு படையைச் சேர்ந்த போலீஸார் அப்பகுதி சென்று கொண்டு 80-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், முதியவர்களை படகு மூலம் மீட்டு அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைத்து உணவு வழங்கினர்.