

பேரிடர்களில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்துள்ள குரும்பக்காட்டில் மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சார்பில் மாவட்ட அளவில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாணவர்கள் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:
"தமிழகம் முழுவதும் சிறந்த சிலம்ப வீரர்கள் 100 பேரைத் தேர்வு செய்து, தலா ரூ.1 லட்சம் வீதம் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர். சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களின் கலையான சிலம்பம் தோன்றியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும், இது எந்தப் பகுதியில் தொடங்கியது என்று ஆய்வு செய்யப்படும்.
சிலம்பத்தைக் கற்றுக்கொண்ட பள்ளி மாணவர்கள், அனைத்து விதமான உயர் கல்வியையும் 3 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் பெறுவதற்கான அரசாணையைத் தமிழக அரசு இயற்றியுள்ளது. மேலும், சிலம்பத்தைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்துப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் ஆர்வம் செலுத்தத் தொடங்கிவிட்டாலே தீய எண்ணம் தோன்றாது. பேரிடர்க் காலத்தில் எதையும் எதிர்கொள்ளும் உடல் வலிமை, மன வலிமை சிலம்ப வீரர்களுக்கு ஏற்படும்.
எதிர்காலத்தில் 25 லட்சம் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை உருவாக்குவதற்கான பணிகளை அரசு முன்னெடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களில் இருந்து நாம் தப்பிக்க வேண்டும் என்றால் முதலில் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
அதோடு, இனப்பெருக்கம் செய்யாத, பறவைகள் உட்காருவதற்குக்கூடப் பயன்படாத வெளிநாட்டு ரக மரங்களைத் தவிர்த்துவிட்டு, பூவரச மரம், வேம்பு, அரசமரம், ஆலமரம் போன்ற நாட்டு மரக்கன்றுகளை நடவேண்டும்."
இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.