வேளாண் சட்டங்களால் பேராபத்து; இப்போதும் ஆட்சியாளர்கள் உணரவில்லை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

வேளாண் விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது விவசாயிகள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

"மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் விரோத சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கான மசோதா இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஓராண்டு காலமாக மத்திய பாஜக அரசை எதிர்த்து நடத்திய யுத்தத்தில் விவசாயிகள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு விவசாயிகளையும், அனைத்துப் பகுதி மக்களையும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இந்திய விவசாயத்தையும் - விவசாயிகளையும் பாதிக்கும் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெறக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இந்த உயிரிழப்புக்கு பாஜக அரசின் பிடிவாதப் போக்கே காரணமாகும். திரும்பப் பெறும் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான காரணமாக நவம்பர் 19ஆம் தேதி பிரதமர் தனது உரையில் எடுத்துக்காட்டிய விஷயங்களே மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டத்தினால் ஏற்படப் போகும் பேராபத்து குறித்து இப்போதும் ஆட்சியாளர்கள் உணரவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

விவசாயிகளின் மற்ற கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை நிராகரித்து விவாதம் எதுவுமின்றி சட்டத்தை நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு. அதுமட்டுமல்லாமல் விவாதம் நடத்த வேண்டுமென்று கோரியது குற்றம் என்று சி.பி.எம் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. பாஜக அரசின் எதேச்சதிகாரமான போக்கிற்கு இது மற்றுமொரு உதாரணமாகும்.

இத்தகைய சட்டவிரோதமான, தன்னிச்சையான போக்கைக் கைவிட்டு, வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதப்படுத்தும் சட்டமியற்றுவது, மின்சாரத் திருத்த மசோதா 2020-ஐ திரும்பப் பெறுவது மற்றும் போராட்டக் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள இதர கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு முன்வரவேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது."

இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in