Published : 29 Nov 2021 05:31 PM
Last Updated : 29 Nov 2021 05:31 PM

நூல் விலையைக் குறைக்கக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் 27-11-2021 அன்று மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:

நாட்டின் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு உள்ளடக்கியுள்ளது. இந்தியாவில் நூல் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆடை ஏற்றுமதி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்த நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டில் 2-வது பெரிய தொழிலான ஜவுளித் துறையில் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுவதுடன் வேலை இழப்புகளும் பெரிய அளவில் ஏற்படும்.

2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய வரவு-செலவுத் திட்டத்தில் 5% அடிப்படை சுங்க வரி, 5% விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி மற்றும் 10% சமூக நல வரி விதிக்கப்பட்டதால், ஒட்டுமொத்த இறக்குமதி வரி 11% ஆக உயர்ந்ததே பருத்தி விலை ஏற்றத்திற்கான ஒரு முக்கிய காரணம்.

எனவே, ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கவும், வேலை இழப்பைத் தடுத்திடவும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தலையிட்டு பின்வரும் கொள்கை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

1. ஊகவணிகத்தைத் தவிர்க்க ஏதுவாக பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும்.

2. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் (e-auction) பங்கு பெற ஏதுவாக, தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்தி குறைந்தபட்சம் 500 பருத்தி பேல்கள் போதுமானது என்ற வகையில் வணிக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சீரமைக்க வேண்டும்.

3. உச்சபட்சப் பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர் முதல் மார்ச் வரை 5% வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுக.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்."

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x