

தமிழகத்தில் நாளை முதல் மழையின் அளவு குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். நாளை வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி, அதிலிருந்து 48 மணி நேரம் கழித்து அது தாழ்வு மண்டலமாக மாறும்.
தென்கிழக்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
நவம்பர் மாதத்தில் அதிகபட்ச மழையாக புதுவையில் இதுவரை 104 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காரைக்காலில் 102 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 91 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 100 செ.மீ.க்கு மேல் மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.
நாளை முதல் அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்தில் மெல்ல மெல்ல மழையின் அளவு குறையும். சென்னையிலும் குறையும்.”
இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.