கோமாரி நோய்த் தாக்கத்தில் இறந்த கன்றுகளுடன் புதுச்சேரி சட்டப்பேரவை முன்பு போராட்டம்: மூடப்பட்ட வாயில்

கோமாரி நோய்த் தாக்கத்தில் இறந்த கன்றுகளுடன் புதுச்சேரி சட்டப்பேரவை முன்பு போராட்டம்: மூடப்பட்ட வாயில்
Updated on
1 min read

புதுவை அரசும், கால்நடைத்துறையும் அலட்சியமாகச் செயல்படுவதாகக் குறிப்பிட்டு, கோமாரி நோய்த் தாக்கத்தில் உயிரிழந்த கன்றுகளுடன் சட்டப்பேரவை முன்பு பாதிக்கப்பட்டோர் போராட்டம் நடத்தினர். இதனால் சட்டப்பேரவை வாயில் மூடப்பட்டது.

கோமாரி நோய் பாதிப்பால் புதுச்சேரியில் ஏராளமான மாடுகள், கன்றுகள் உயிரிழந்து வருகின்றன. குறிப்பாக பாகூர், ஏம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடை உயிரிழப்புகள் அதிக அளவில் உள்ளன. கால்நடைத்துறை மருத்துவமனைகளில் மருந்துகளோ, தடுப்பூசியோ இல்லை எனக் குற்றச்சாட்டுகளைக் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் அரசு சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை நவம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கியதாகத் தெரிவித்தனர். ஆனால், முழு அளவில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. தொடர்ந்து கால்நடைகள் உயிரிழப்பு தொடர்கிறது.

இந்த நிலையில், புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகரைச் சேர்ந்த ராஜ்குமார் வீட்டில் வளர்த்து வந்த ஒரு மாடும், 4 பசுங்கன்றுகளும் கோமாரி நோய்த் தாக்கத்தில் பாதித்து தற்போது உயிரிழந்துள்ளன. இதனால், விரக்தியடைந்த அவர், இன்று புதுச்சேரி சட்டப்பேரவைக்கு முன்பு இறந்த பசுங்கன்றுகளைக் கொண்டுவந்து போட்டு, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருடன் அப்பகுதி விவசாயிகளும் கலந்துகொண்டனர். இதையடுத்து சட்டப்பேரவை வாயில் மூடப்பட்டது. தகவல் அறிந்து வந்த புதுச்சேரி பெரியகடை போலீஸார், இது தொடர்பாகக் கால்நடைத்துறையினரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானப்படுத்தி அனுப்பினர். இறந்து கிடந்த பசுங்கன்றுகளைப் புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் மூலம் அப்புறப்படுத்தினர்.

போராட்டத்தில் பங்கேற்ற புதுச்சேரி தனியார் பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கிருஷ்ணன் கூறுகையில், "புதுவையில் கோமாரி நோய்க்குக் கடந்த மே, ஜூன் மாதங்களில் தடுப்பூசி செலுத்த வேண்டும். இரண்டு மாதம் தாமதமாக தடுப்பூசி போடும் பணியை அரசு தொடங்கியது. நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் கோமாரியால் இறந்துள்ளன.

தற்போதைய கனமழையால் தடுப்பூசி போடும்போது ஏற்படும் காய்ச்சல் பாதிப்பில் கடுங்குளிரில் மாடுகள், கன்றுகள் உயிரிழந்து வருகின்றன. கால்நடைத் துறையினரிடம் தெரிவித்தாலும் அவர்கள் அலட்சியமாகத் தடுப்பூசி போடுகின்றனர். கால்நடை வளர்ப்போர் முறையிட்டாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால்தான் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடாவது தரவேண்டும்" என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in