

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட கடலோர மாவட்டங்கள், ஏனைய டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். குமரிக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.