

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறுபகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
சென்னை மற்றும் மாநிலம் முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி முதல் நேரில் பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி, பத்மாவதி நகரில் வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஆய்வு செய்து, மழைநீரை போர்க்கால அடிப்படையில் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் பத்மாவதி நகரில் இருந்து வேலப்பன்சாவடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வரை 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து நிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அப்பள்ளியில் உள்ள நிவாரண முகாமைப் பார்வையிட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார். அதையடுத்து பூவிருந்தவல்லி நகராட்சி, அம்மன் கோவில் தெரு,காவலர் குடியிருப்பில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
ஆவடி மாநகராட்சி, ராம் நகர் மற்றும் திருமுல்லைவாயில், கணபதி நகர் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை இயந்திரம் மூலம் வெளியேற்றும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடச் செல்லும் வழியில், ஆவடி மாநகராட்சி, மூர்த்தி நகர், பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் சாலையோரக் கடையில் முதல்வர் தேநீர் அருந்தி,பொதுமக்களிடம் கலந்துரையாடினார். திமுக சார்பில் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிவாரண உதவிகளையும் பொதுமக்களுக்கு முதல்வர் வழங்கினார்.
சென்னை வில்லிவாக்கத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு அருகில் நடைபெற்று வரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், எம்.பி., எம்எல்ஏ.க்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.
குழந்தைக்கு பெயர் சூட்டிய முதல்வர்
திருவேற்காடு - பத்மாவதி நகரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், நிவாரண முகாமுக்கு நடந்துசென்றபோது, ஒரு தம்பதியின் ஆண் குழந்தைக்கு ’சோழன்’ என பெயர் சூட்டினார்.
முதல்வர் சாலையில் நடந்துச் சென்றபோது, அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம், “எல்லோரும் எப்படி இருக்கீங்க” எனகேட்டார். அதற்கு பதிலளித்த பொதுமக்கள், “எங்கள் பகுதிக்கு வந்த முதல் முதலமைச்சர் நீங்கள்தான். சந்தோஷமாக உள்ளது” என்றனர். அவர்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தவர்களை பார்த்த முதல்வர், கண்டிப்பாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்.
| அதிகாரிகளுடன் களத்தில் நிற்பேன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவில் கூறியிருப்ப தாவது: சென்னையில் கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1,000 மி.மீ மழை பதிவாவது இது நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப் பலிகளை தடுத்து, முடிந்தவரை உடைமை சேதங்களை குறைத்து,பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டுள்ளன. நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்துள்ளதற்கு முழுமுதற் காரணம் ஓய்வு, உறக்கமின்றி நாள் முழுவதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும்மாநகராட்சி, மின்சாரம், பொதுப்பணி, வருவாய், காவல் உள்ளிட்டஅனைத்துத் துறை அதிகாரிகள்தான். அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது. அடுத்த சில நாட்களுக்கு மிகஅதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களோடு முதல்வராகிய நானும் களத்தில் நிற்கிறேன். நிற்பேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார். |