Last Updated : 29 Nov, 2021 03:06 AM

 

Published : 29 Nov 2021 03:06 AM
Last Updated : 29 Nov 2021 03:06 AM

சிவகங்கை அருகே சிறுநீரக பாதிப்பால் 2 ஆண்டுகளில் 20 பேர் இறப்பு: தீர்வு கிடைக்காமல் தவிக்கும் கிராம மக்கள்

சிவகங்கை அருகே சிறுநீரகப் பாதிப்பால், 2 ஆண்டுகளில் 20 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

சிவகங்கை அருகே கீழப்பூங்குடி ஊராட்சி வீரப்பட்டியில் 350 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் விவசாயிகளாகவும், கூலித்தொழிலாளர்களாகவும் உள்ளனர்.

இக்கிராமத்துக்கு அருகே உள்ள கண்மாயில் ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அந்நீர் உவர்ப்பாக உள்ளது. இந்நிலையில் அக்கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்டோர் சிறுநீரக பாதிப்பால் இறந்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் சிலருக்கும் சிறுநீரகம் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலருக்கு சிறுநீரகக் கல் பிரச்சினையும் உள்ளது. இதற்கு தீர்வு கிடைக்காமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தில் சிறுநீரக பாதிப்பால் சிறுவயதிலேயே பலர் இறந்து விட்டனர். சமீபத்தில் சகோதரர்களான மகேஷ் (37), சுப்ரமணி (32) ஆகியோர் இறந்தனர். பெரும்பாலும் ஆண்கள்தான் இறக்கின்றனர். இதனால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் மண், தண்ணீரை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். அதன்பிறகு எந்தவித நடவடிக்கையும் இல்லை.

மருத்துவர்களும் நாங்கள் குடிக்கும் தண்ணீர் தான் பிரச்சினை என்கின்றனர். குடிநீரை சுத்திகரித்து விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து சிவகங்கை மருத்துவக் கல்லூரி டீன் ரேவதிபாலன் கூறுகையில், ‘சிவகங்கை பகுதியில் சிறுநீரக பாதிப்பு அதிகம் உள்ளது. அது குறித்து ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x