

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ளது உப்பாறு அணை. திருமூர்த்தி அணையின் உபரி நீரை இங்கு சேமிக்கும் வகையில் அணை கட்டப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னர் உபரி நீரால் பயன்பெற்று வந்த உப்பாறு அணைக்கு, பிஏபி திட்ட பாசன விரிவாக்கம் நடந்த பிறகு, உபரி நீரின் அளவு குறைந்தது.
அதோடு, அணைக்கு மழைநீர் வரும் ஓடையில் பல இடங்களில் ஊராட்சி நிர்வாகங்களால் தடுப்பணைகள் கட்டப்பட்டதால் அணைக்கு வரக்கூடிய மழைநீரும் வராமல் போய்விட்டது. அணையின் நீராதாரங்கள் அழிக்கப்பட்டதால் உப்பாறு அணையால் பயனடைந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி உப்பாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 7 மணி நேரத்துக்கும் மேல் கனமழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்து நேற்று முன்தினம் இரவு அணையின் மொத்த உயரமான 24 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. இதனையடுத்து, 20 ஆண்டுகளுக்குப் பிறகு உப்பாறு அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உப்பாறு ஓடையில் சென்றது. அணையில் உபரி நீர் திறப்பதைக் காண சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் விசில் அடித்தும், பட்டாசு வெடித்தும் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளில் உப்பாறு அணை 13 அடியை தாண்டியதில்லை. இதனால் தாராபுரம் தாலுகாவில் உள்ள கெத்தல்ரேவ், நஞ்சியம்பாளையம், தும்பலப்பட்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளிலும் நீலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
கடந்த ஒரு வாரமாக பிஏபி அரசூர் ஷட்டர் வழியாக உப்பாறு அணைக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், உப்பாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குண்டடம், வாகைத்தொழுவு, கேத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக அணைக்கு கடந்த வாரத்தில் 1200 கனஅடி நீர்வரத்து ஏற்பட்டு நீர்மட்டம் முழு உயரத்தை எட்டியது. இதனால் சுற்றுவட்டாரங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றனர்.