

நாகை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 1.62 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்திலும் 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. நகர விரிவாக்கப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 102 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடியில் வடிகால் வாய்க்கால் கரை உடைந்ததால், விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மோட்டார் மூலமாக தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ஆற்று முகத்துவாரங்களில் மணல் திட்டுகள் உருவாகியுள்ளதால், கடலில் கலக்கும் தண்ணீரின் வேகம் குறைந்து, விளைநிலங்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் 1.62 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன. தண்ணீர் வடிய மேலும் தாமதமானால் நெற்பயிர்கள் சேதமடைந்து, பெருமளவில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
கடல் அலைகளின் சீற்றம், காற்றின் வேகம் காரணமாக மாவட்டத்தில் ஒரு லட்சம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், ஆரியநாட்டுத் தெரு, நாகூர், பட்டினச்சேரி உள்ளிட்ட கடற்கரையோரங்களில் ஆயிரக்கணக்கான ஃபைபர் படகுகளும், பழைய மற்றும் புதிய மீன்பிடி துறைமுகங்களில் விசைப் படகுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூரில் 40 ஆயிரம் ஏக்கர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே பரவலாக மழை பெய்து வருவதால், ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. இதையடுத்து, கடந்த இரு வாரங்களுக்கு முன் மழை பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்தால் கணக்கெடுக்கப்பட்டு, மழை பாதிப்பு குறித்த ஆய்வுக்காக வந்த மத்தியக் குழுவிடம் அந்த அறிக்கை வழங்கப்பட்டது.
அதன்பிறகு, தற்போதும் தொடர்ந்து பெய்த மழையால், மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து, நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. எனவே, இதையும் மாவட்ட நிர்வாகம் கணக்கெடுப்பில் சேர்த்து, நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் அருகே ரெட்டிப்பாளையம் பகுதியில் முதலைமுத்துவாரி வாய்க்கால் தரைப்பாலம் மூழ்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அம்மாபேட்டை அருகே திருக்கோவில்பத்து கிராமத்தில் 500 ஏக்கரில் வரப்பு, வாய்க்கால் என எதுவும் தெரியாத அளவுக்கு 4 அடி உயரத்துக்கு மழைநீர் கடல்போல தேங்கி, நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 108 கூரை வீடுகள், 45 ஓட்டு வீடுகள் என 153 வீடுகள் சேதமடைந்துள்ளன. 23 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
கடலூரில் 500 ஏக்கர்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மதுவானைமேடு, துறிஞ்சிக்கொல்லை கிராமத்தின் வழியாக செல்லும் பரவனாறில் நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் விடப்படுவதால் அந்த தண்ணீர் வயல்களில் நுழைந்துள்ளது.தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மதுவானைமேடு, துறிஞ்சிக்கொல்லை உள்ளிட்ட கிராமங்களில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "ஆண்டுதோறும் மழைகாலத்தில் இதுபோல நடக்கிறது. நெய்வேலி 2-வது சுரங்கத்தில் இருந்து வெளிவரும் நீரைவயல்களில் நுழையாமல் தடுத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மழை வெள்ள பாதிப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" என்றனர்.
ஆற்று முகத்துவாரங்களில் மணல் திட்டுகள் உருவாகியுள்ளதால், கடலில் கலக்கும் தண்ணீரின் வேகம்குறைந்து, விளைநிலங்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.