Published : 29 Nov 2021 03:06 AM
Last Updated : 29 Nov 2021 03:06 AM

மன்னார் வளைகுடா தீவுகளில் 25 ஆயிரம் பனை விதைகள் நடவு: மக்களை பாராட்டிய பிரதமர் மோடி

வான்தீவில் நடவு செய்யப்பட்டு உள்ள பனை விதைகள் முளைத்து வளர்ந்துள்ளன.

தூத்துக்குடி

மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவுகளை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க சுமார் 25 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதை,பிரதமர் நரேந்திர மோடி ‘மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசும்போது பாராட்டினார்.

மன்னார் வளைகுடா பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இதில் 2 தீவுகள் ஏற்கெனவே கடலில் மூழ்கிவிட்டன. தூத்துக்குடி பகுதியில் உள்ள வான்தீவு கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. வான் தீவை பாதுகாக்கும் பொருட்டு அப்பகுதியில் கடல் அரிப்பை தடுக்க மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் 2018-ல் பனை விதைகளை நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது.

தூத்துக்குடி பகுதி வனச்சரக அலுவலர் ரகுவரன் முயற்சியால் வனத்துறை அலுவலர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள், கடலோர கிராம சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவினர் மூலம் வான்தீவில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

வான் தீவு பகுதியில் மட்டும் சுமார் 2,000 பனைமர விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த விதைகள் முளைத்து தற்போது 2 அடி வரை வளர்ந்துள்ளன. தூத்துக்குடி பகுதியில் உள்ள காசுவாரி தீவு, நல்லதண்ணி தீவுகளிலும் பனைமர விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் உள்ள 10 தீவுகளிலும் பனைமர விதைகளை நடவு செய்யும் பணி விரிவுபடுத்தப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் 10 தீவுகளிலும் சுமார் 25 ஆயிரம் பனைமர விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர பல்வேறு பாரம்பரிய மரங்களையும் நட்டு வனத்துறையினர் பராமரிக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசும்போது இந்த நடவடிக்கைகளை பாராட்டினார். பிரதமரின் பாராட்டால் வனத்துறையினர், கடலோர கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x