

திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் இன்று பார்வையிட்டு, அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம் கதவணை அருகே யாரும் செல்லவேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
கடலூர் மாவட்டம் கீழ்செருவாயில் 24 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 29.72 அடி உயர 2580 கன அடி கொள்ளளவு கொண்ட வெலிங்டன் நீர் தேக்கம் உள்ளது.கடந்த ஒருமாதமாக பெய்துவரும் தொடர் மற்றும் கன மழை காரமாக நீர் தேக்கம் 27அடியை எட்டியுள்ளதால், அணையில் பாதுகாப்புக் கருதி 380 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திட்டக்குடி சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று, நீர்த்தேக்கப் பகுதிக்குச் சென்று, கரையின் பலம் குறித்தும், கதவணைகள் தற்போதைய நிலைக் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் நீர் தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவுக் குறித்தும், தண்ணீர் திறப்பதால் வெள்ள அபாயம் ஏதேனும் ஏற்படுமா என்பது குறித்தும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து நீர்த் தேக்கத்தின் கதவணைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து, கதவணை அருகே யாரும் செல்லவேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.