

பொழுதுபோக்கு திரைப்பட விமர்சனங்கள் தேவையில்லாதது என்று வேலூர் இப்ராஹிம் போராட்ட எச்சரிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நமது இலக்கை உணர்ந்து செயல்பட வேண்டும்; பொழுதுபோக்கு திரைப்படங்கள் மீதான விமர்சனங்கள் தேவையில்லாதது'' என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் 90களில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம். இத்திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பாராட்டையும் கண்டனங்களையும் ஒருசேரக் குவித்தது.
குறிப்பாக ஜெய்பீம் திரைப்படத்தை இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டோர் பாராட்டினர். அதேநேரம் பாமக கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் முன்வைத்தது. பாஜகவும் ஜெய்பீம் திரைப்படத்தை விமர்சனம் செய்தது.
இந்நிலையில் சிம்பு நடிப்பில் நீண்ட நாள் கழித்து கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 25) அன்று 'மாநாடு' வெளியானது. ஒரு பொழுதுபோக்கு படம் என்கிற அளவில் இப்படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நலல வரவேற்பை இத்திரைப்படம் பெற்றுள்ளது. ஆனால் 'மாநாடு' திரைப்படத்திற்கு பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசியச் செயலர் வேலூர் இப்ராஹிம் நேற்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
வேலூர் இப்ராஹிம் போராட்ட எச்சரிக்கை
பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசியச் செயலர் வேலூர் இப்ராஹிம் தனது அறிக்கையில் கூறியதாவது: 'மாநாடு' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இத்திரைப்படத்தில் மீண்டும் ஒரு கலவரத்தை காவல் துறையே உருவாக்குகிறது. இஸ்லாமியர்கள் இதை பகடைக்காயாகப் பயன்படுத்துகிறார்கள் என சொல்லப்படுகிறது. இது குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்களை ஆதரிக்கக் கூடிய நிலையை உருவாக்குகிறது.
காவல் துறையை இழிவுபடுத்தும் காட்சிகளும், இஸ்லாமிய மக்களுக்கு எதிராக காவல் துறையை சித்தரிக்கும் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இதைத் தவிர்க்க சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவோ, படத்தை தடை செய்யவோ வேண்டும். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் படத்தின் இயக்குநர், நடிகர் சிம்பு ஆகியோர் வீடுகளின் முன்பு பாஜக சிறுபான்மை அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்'' இவ்வாறு வேலூர் இப்ராஹிம் தெரிவித்திருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு வரும் திரைப்படங்களில் உண்மைக்கு புறம்பாகக் கருத்துகள் வந்தால் அதை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எந்த தவறும் இல்லை. சில இடத்திலே பாரதிய ஜனதா கட்சி நம்முடைய கண்டனங்களையும் கடுமையாக பதிவும் செய்திருக்கிறது.
யார் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல்
திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குநரின் கற்பனையின் வெளிப்பாடு அவர்கள் பார்த்த படித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் ஒரு திரைப்படம் உருவாகிறது. நமது கட்சி சகோதர சகோதரிகள், சில நேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
கட்சியில் முக்கியப்பதவியில் இருக்கும் யார் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல் இருக்கிறது. அது நிறைய நேரத்தில் நமது கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. எப்பொழுது எதற்காக பேச வேண்டுமோ அப்பொழுது பேச வேண்டும் பேசக்கூடாத நேரத்தில், பேசுவதை தவிர்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்.
நமது இலக்கு, நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு, நமக்கு முன் இருக்கும் சவால்கள் இவற்றை மனதில் கொண்டு கவனமாகச் செயல்படுங்கள். எனவே திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும்''
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.