Published : 28 Nov 2021 03:06 AM
Last Updated : 28 Nov 2021 03:06 AM

‘சுயசார்பு பாரதம்: துடிப்பான, வலிமையான இந்தியா’ நூலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் குருமூர்த்தி வழங்கினார்: ‘விவேகானந்தா அகில உலக மையம்' வெளியீடு

விவேகானந்தா அகில உலக மையம் வெளியிட்டுள்ள ‘சுயசார்பு பாரதம்: துடிப்பான, வலிமையான இந்தியா' என்ற நூலை பிரதமர் மோடியிடம் பத்திரிகையாளர் குருமூர்த்தி நேரில் வழங்கினார்.

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடந்த 2020 மே 12-ம் தேதி ‘ஆத்மநிர்பர் பாரத்’ (சுயசார்பு பாரதம்) என்ற திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். உள்நாட்டு தொழில்கள், உள்நாட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். அதன்படி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்த நிலையில், ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து ‘சுயசார்பு பாரதம்:துடிப்பான, வலிமையான இந்தியா' என்ற நூலை ‘விவேகானந்தா அகில உலக மையம்' வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர், ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தியை தலைவராக கொண்டு செயல்படும் இந்தமையம், தேசிய, சர்வதேச பிரச்சினைகள் தொடர்பான ஆழமான ஆய்வுகளை ஊக்குவித்து வருகிறது. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக, பொருளாதார, அரசியல் போக்குகளை கண்காணித்தும், தீவிரவாதத்துக்கான காரணங்களை ஆராய்ந்தும் அதற்கான தீர்வுகளை முன்வைக்கும் பணிகளையும், இதுதொடர்பான கலந்துரையாடல்கள், விவாதங்களையும் இந்த மையம் முன்னெடுக்கிறது.

அதன் ஒரு பகுதியாக, ஆத்மநிர்பர் பாரத் திட்டம் குறித்து விரிவாகஅலசி ஆராய்ந்து எஸ்.குருமூர்த்தி, அரவிந்த் குப்தா, வினய் சகஸ்ரபுத்தே, அனிர்பன் கங்குலி, அர்பிதாமித்ரா, அசோக்குமார் முகர்ஜி,சூர்யபிரகாஷ், ஆர்.வைத்தியநாதன், தர் வேம்பு உள்ளிட்டகல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் 17 பேர் பல்வேறு தலைப்புகளில் எழுதிய கட்டுரைகளை இந்நூலில் குருமூர்த்தியும், அரவிந்த் குப்தாவும் தொகுத்துள்ளனர். ‘ஆத்மநிர்பர் பாரத் - வரலாற்று சூழலும்,தத்துவார்த்த அடித்தளமும்' என்றதலைப்பில் குருமூர்த்தி, சுயசார்பு இந்தியா திட்டம் குறித்து ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளார்.

நூலில் பிரதமரின் செய்தி

இந்நூல் குறித்த பிரதமர் மோடியின் செய்தியும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. அதில், ‘‘கடந்த ஆறரை ஆண்டுகளாக, சுயசார்புமனப்பான்மையை உருவாக்கும்வகையில் எங்கள் கொள்கைகளும், செயல் திட்டங்களும் அமைந்துள்ளன. எங்கள் முழுமையான முயற்சிகள் ஒவ்வொரு துறையையும் வலுப்படுத்துவதை வலியுறுத்தி வருகின்றன. சுயசார்பு பாரதம் என்ற வார்த்தை, இந்தியாவை எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் பார்க்கிறது.

கரோனா காலத்தில், முன் எப்போதும் இல்லாத சவால்களை 130 கோடி மக்களும் ஒன்றிணைந்து மன உறுதி, தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டோம். இந்நூல் சுயசார்பு பாரதம் பற்றிய விரிவான பார்வையை வெளிப்படுத்தும் என நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த 25-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த குருமூர்த்தி, இந்நூலை வழங்கினார். அப்போது, சுயசார்பு பாரதம் குறித்தும், நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்தும் உரையாடினர்.

455 பக்கங்கள் கொண்ட இந்த நூல் விலை ரூ.995. ‘ஆர்யன் புக்ஸ்இன்டர்நேஷனல், பூஜா அபார்ட்மென்ட்ஸ், 4பி அன்சாரி சாலை, புதுடெல்லி - 110002’ என்ற முகவரியில் இந்நூல் கிடைக்கும் என விவேகானந்தா அகில உலக மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x