Published : 28 Nov 2021 03:06 AM
Last Updated : 28 Nov 2021 03:06 AM

கோவையில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்த விவகாரம்; கேரளாவுக்கு விசாரணைக்கு சென்ற தமிழக வனத்துறை அதிகாரிகள் சிறைபிடிப்பு

கோவையில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, கேரளாவுக்கு விசாரணைக்காக சென்ற தமிழக வனத்துறை அதிகாரிகள் நேற்று சிறை பிடிக்கப்பட்டனர்.

கோவை மதுக்கரையை அடுத்த நவக்கரை அருகே, நேற்று முன்தினம் இரவு 3 யானைகள் ரயில் மோதி உயிரிழந்தன. இதைத் தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய ரயிலின் இன்ஜின் மாற்றப்பட்டு, புதிய இன்ஜின் பொருத்தப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய ரயிலை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் உதவிஓட்டுநர் ஆகியோரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருந்ததால், மாற்று இன்ஜின் வரவழைக்கப்பட்டு, மாற்று ஓட்டுநர் மூலம் விரைவு ரயில் அங்கிருந்து சிறிது தாமதத்துக்கு பின்னர் புறப்பட்டது.

யானைகளின் மீது ரயில் மோதியபோது, அதன் வேகம் எவ்வளவு இருந்தது, விபத்து ஏற்பட்ட நேரம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வனவர், வனக்காப்பாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய தமிழக வனத்துறை அதிகாரிகள் 5 பேர் பாலக்காடு ரயில் நிலைய அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கிருந்த அதிகாரிகளைச் சந்தித்து, தாங்கள் வந்த விவரத்தை தெரிவித்து விசாரித்தனர். ​அப்போது, ரயிலின் வேகம், நேரம் போன்றவற்றை அறிய, தொழில்நுட்ப வல்லுநர்கள் வர வேண்டும், அதற்கு சிறிதுநேரமாகும் என அங்கிருந்த அதிகாரிகள், தமிழக வனத்துறையினரிடம் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, ரயில் ஓட்டுநர்,உதவி ஓட்டுநர் ஆகியோரை விசாரணைக்காக பிடித்து வைத்திருக்கும் தகவலை அறிந்த ரயில்வே தொழிற்சங்கத்தினர், ரயில்வே பாதுகாப்புப் படையினரின் உதவியுடன், பாலக்காடு ரயில் நிலையத்துக்கு விசாரணைக்காக வந்திருந்த தமிழக வனத்துறை அதிகாரிகளை சிறைபிடித்தனர். கோவையில் பிடித்து வைத்துள்ள ரயில் ஓட்டுநர், உதவி ஓட்டுநரை விடுவித்தால் மட்டுமே உங்களை இங்கிருந்து விடுவிப்போம் என்றனர்.

அவர்கள் சிறைபிடிக்கப்பட்ட விவரம், கோவை வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார் தலைமையிலான உயரதிகாரிகள், பாலக்காடு கோட்ட ரயில்வே உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், ரயில்வே அதிகாரிகள் சிலர் நேற்று மாலை கோவைக்கு வந்தனர். இங்கிருந்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ரயில் ஓட்டுநர், உதவி ஓட்டுநரை அழைத்துச் சென்றனர்.

இத்தகவலையடுத்து, பாலக்காட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழக வனத்துறையினர், அங்கிருந்து விடுவிக்கப்பட்டனர். ஏறத்தாழ 6 மணி நேரம் தமிழக வனத்துறை அதிகாரிகள், பாலக்காட்டில் சிறைபிடிக்கப்பட்டு இருந்தனர்.

யானைகள் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக விசாரித்த கோவை வனத்துறையினர், ரயில் ஓட்டுநர், உதவி ஓட்டுநர் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x