Published : 28 Nov 2021 03:08 AM
Last Updated : 28 Nov 2021 03:08 AM

காஞ்சிபுரத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையின் விவரம்:

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 பொதுப்பணித் துறை ஏரிகளில் சுமார் 341 ஏரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள 380 ஏரிகளில் 100 சதவீதம் நீர் நிரம்பி கலங்கல்கள் வழியாக உபரிநீர் செல்கிறது.

மேலும் தற்போது பெய்து வரும் மழை காரணமாக பாலாறு, செய்யாறு மற்றும் அடையாறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இதேபோல் குன்றத்தூர் வட்டம் அடையாறு வடிநில பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள ஏரிகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரிநீர் வெளியேறுகிறது. தற்போது அடையாறு தர்காஸ் சாலை பாலத்தில் 5,719 கனஅடி நீர் செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடையாறு கரையோரம் அமைந்துள்ள வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அஷ்டலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், புவனேஸ்வரி நகர், அமுதம் நகர் தாழ்வான குடியிருப்புகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.

தலையில்லா பெரும்பாக்கம்

காஞ்சிபுரம் ஆர்ப்பாக்கம் ஏரிக்கரை அருகேயுள்ள தலையில்லா பெரும்பாக்கம் பகுதியில், ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீரால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய பலராமன்(60), அவரது மனைவி ஆகியோரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். மேலும், இரு ஆடுகளும் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x