Published : 28 Nov 2021 03:08 AM
Last Updated : 28 Nov 2021 03:08 AM

இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட 18 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்: 5 மீனவர்கள் கரோனா சிகிச்சைக்கு பிறகு திரும்ப உள்ளதாக தகவல்

இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்களில் 18 மீனவர்கள் நேற்று காலை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த அக். 11-ம்தேதி அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் சிவகுமார், சிவநேசனுக்கு சொந்தமான விசைப்படகில் 23 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் கடந்த அக்.13-ம் தேதி அதிகாலையில் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மீனவர்களை உடனே விடுவித்து இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, மத்தியஅரசு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுத்து வந்தது.

இதற்கிடையே, தமிழக மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்யஇலங்கை பருத்தித் துறை நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, இலங்கை சிறையில்இருந்து தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தமிழகமீனவர்கள் இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்தனர். அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 5 மீனவர்களுக்கு கரோனாதொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, 5 மீனவர்களுக்கும் அங்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 18 மீனவர்களும் நேற்றுஅதிகாலை 3 மணிக்கு இலங்கையிலிருந்து சென்னைக்கு புறப்படும் ஏர்இந்தியா விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ஏர்இந்தியா விமானம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. சென்னை விமான நிலையத்தில் தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்றனர். மேலும், பாஜக மீனவர் அணியினர் மீனவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். அதன் பின்பு, மீனவர்கள் வேன்மூலம் சொந்த ஊரான நாகப்பட்டினத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இலங்கையில் உள்ள 5 மீனவர்களின் நிலை குறித்து மீன்வளத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “சென்னை வந்தடைந்த மீனவர்களை வேன் மூலம் அவரவர் சொந்த ஊருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளோம். கரோனாவால் பாதிக்கப்பட்ட 5 மீனவர்களும் அங்கு சிகிச்சையில் இருந்துவருகின்றனர். எனவே, சிகிச்சை முடிந்து கரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த பிறகு தமிழகம் அழைத்து வருவோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x