கோவை குண்டுவெடிப்பு வழக்கில் நீண்ட காலமாக சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளை முதல்வர் விடுவிப்பார்: தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் நம்பிக்கை

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் நீண்ட காலமாக சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளை முதல்வர் விடுவிப்பார்: தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் நம்பிக்கை
Updated on
1 min read

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி நீண்ட காலமாக சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார் என நம்புகிறோம் என்று தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

மஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவை சார்பில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மானுக்கு, திருச்சி தென்னூர் ஹைரோடு பெரிய பள்ளிவாசலில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்ற எம்.அப்துல்ரஹ்மான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான சொத்துகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

தமிழக சிறைகளில் வாடும் 700-க்கும் மேற்பட்ட ஆயுள் கைதிகளை, தகுந்த பரிசீலனைக்கு பிறகு விடுதலை செய்ய உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்காக அரசு வகுத்துள்ள நிபந்தனைகளைப் பார்த்தால், சிறைகளில் உள்ள முஸ்லிம்களை விடுவிக்க வாய்ப்பே இல்லை என இச்சமுதாய தலைவர்கள் சிலர் கருதுகின்றனர்.

குறிப்பாக கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருப்போர், எந்த வகையிலும் வெளிவர முடியாது என தவறான தகவல் பரப்பப்படுகிறது. யாரும், எந்த வகையிலும் நம்பிக்கையை இழந்துவிட வேண்டியதில்லை. மத, சமுதாய பாரபட்சம் இல்லாமல் முதல்வர் செயல்படுகிறார். அவருக்கு ஒத்துழைப்பு தர வேண்டியது நமது கடமை. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி நீண்ட காலமாக சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என நம்புகிறோம் என்றார். விழாவில், மஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவை மாவட்டத் தலைவர் கவிஞர் கா.சையது ஜாபர், பொதுச் செயலாளர் எம்.அப்துல்வஹாப், மாவட்டப் பொருளாளர் சிராஜூதீன், மாவட்ட கவுரவ தலைவர் ஜி.எஸ்.ஏ.மன்னான், திருச்சி மாவட்ட அரசு டவுன் காஜி ஜலீல் சுல்தான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in