Published : 27 Nov 2021 10:08 PM
Last Updated : 27 Nov 2021 10:08 PM

சென்னையில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை; ஓய்வுறக்கமின்றி பணியாற்றும் அதிகாரிகள்- நானும் களத்தில் நிற்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை

சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை, ஓய்வுறக்கமின்றி நாள் முழுவதும் அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும், நானும் களத்தில் நிற்கிறேன், நிற்பேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ஆம் தேதி முதல் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில், பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

இதனால், பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்து வருகிறது. மக்கள் இயல்புவாழ்க்கைக்கு திரும்பிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளும், மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னை, திரு.வி.க.நகர் மண்டலம், டிமெலஸ் சாலை, பட்டாளம் மற்றும் புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, இரவு சுமார் 7.30 மணியளவில் கொட்டும் மழையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை, தியாகராய நகர், விஜயராகவாச்சாரி சாலைப் பகுதிகளில் கால்வாயில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளநீர் வரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், ஜி.என். சாலை, பசுல்லா சாலை மற்றும் திருமலை சாலை ஆகிய பகுதிகளில் கனமழையால் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை கொட்டும் மழையில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

‘‘சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள்.

இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து; முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து; பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு; நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி நாள் முழுவதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள்தான். அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது!

அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு முதல்வராகிய நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x