Last Updated : 27 Nov, 2021 07:28 PM

 

Published : 27 Nov 2021 07:28 PM
Last Updated : 27 Nov 2021 07:28 PM

கோவையில் ரயில் மோதி விபத்து; கருவுடன் பெண் யானை உயிரிழந்த சோகம்: ரயில் ஓட்டுநரிடம் விசாரணை

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட நவக்கரையை அடுத்த மொடமாத்தி பகுதியில் ரயில் மோதி உயிரிழந்த பெண் யானை.

கோவை

கோவையில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்ததில், கருவுடன் இருந்த பெண் யானையும் உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து ரயில் ஓட்டுநரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட நவக்கரையை அடுத்த மாவுத்தம்பதி ஊராட்சி, மொடமாத்தி பகுதியில், தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது மங்களூரில் இருந்து சென்னை சென்ற ரயில் மோதியதில் நேற்று (நவ.26) இரவு 3 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மாற்று ரயில் இன்ஜின், ஓட்டுநர் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து ரயில் புறப்பட்டுச் சென்றது.

விபத்துக்குக் காரணமான ரயிலை இயக்கிய ஓட்டுரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த யானைகளின் உடல்கள் கிரேன் உதவியுடன், அருகில் வனத்துறைக்குச் சொந்தமான இடத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், இறந்த பெண் யானையின் வயிற்றில் கரு இருப்பது தெரியவந்தது. உடற்கூராய்வுக்குப் பின் யானைகளின் உடல்கள் குழிதோண்டி அங்கேயே புதைக்கப்பட்டன.

இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார் இன்று கூறியதாவது:

"இந்தப் பகுதியில் ஏ, பி என இரண்டு தண்டவாளங்கள் உள்ளன. பொதுவாக பி தண்டவாளத்தில் அதிக ரயில் போக்குவரத்து இருக்கும். இதில், ஏ தண்டவாளத்தில் வாளையாற்றில் இருந்து எட்டிமடைக்கு இடைப்பட்ட பகுதியில் விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் மோதியதில் 15 வயது மதிக்கத்தக்க ஒரு மக்னா யானை, 6 வயதுடைய ஒரு பெண் யானை ஆகியவை 30 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்த சிறிய ரயில்வே பாலத்தின் கீழ் விழுந்துவிட்டன. விபத்தில் சிக்கிய 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் யானை சுமார் 140 மீ இழுத்துச் செல்லப்பட்டு, தண்டவாளத்திலேயே உயிரிழந்துவிட்டது.

ஏற்கெனவே வனத்துறை, ரயில்வே துறை இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி உரிய கிலோ மீட்டர் வேகத்தில்தான் ரயில் இயக்கப்பட்டதா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவம் எப்படி நடந்தது, ஏன் விபத்தைத் தவிர்க்க முடியவில்லை, ஏன் பி லைனில் ரயிலை இயக்காமல், ஏ லைனில் இயக்கப்பட்டது என ஓட்டுநரிடம் விசாரணை நடைபெறுகிறது. அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டிருந்தால், அந்த விதிமீறலுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்".

இவ்வாறு வன அலுவலர் டி.கே.அசோக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x