Last Updated : 27 Nov, 2021 06:31 PM

 

Published : 27 Nov 2021 06:31 PM
Last Updated : 27 Nov 2021 06:31 PM

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அரிய பொக்கிஷங்கள் கிடைத்ததாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையா?- கோயில் நிர்வாகம் விளக்கம்

கடலூர்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அரிய பொக்கிஷங்கள் கிடைத்ததாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தியில் உண்மை இல்லை எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் மிகவும் பழமையான கோயிலாகும். அந்தக் கோயில் பல்வேறு அரசர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். சைவக் கோயில்களில் இது முதன்மை பெற்றும் ஆகாயத் தலமாகவும் விளங்கி வருகிறது. இந்தக் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கோயிலில் கடந்த கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் சுமார் 5 மாதங்களுக்கு முன்பு மேற்கு கோபுரம் அருகே கற்பக விநாயகர் கோயிலுக்கு எதிரில் உள்ள பைரவர் கோயிலுக்குக் கீழ் புதிய பூங்கா அமைக்கப் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது அந்த இடத்தின் கீழ் பழங்கால மண்டபம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இப்பணி இரவு நேரத்தில் நடந்ததால் வெளியில் யாருக்கும் தெரியவில்லை. தற்போது அந்தப் புகைப்படம் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளம் தோண்டும்போது பழங்கால பஞ்சலோக சிலைகள், சில அரிய பொக்கிஷங்கள் கிடைத்ததாகவும் கோயில் நிர்வாகம் அதனை வெளியில் தெரிவிக்கவில்லை என்றும் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

வாட்ஸ் அப்பில் பரவும் படம்

இதனால் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களிடம் கேட்டபோது, ''அப்படி எதுவும் கிடைக்கவில்லை, மேற்கு கோபுர உள் வாயிலில் கீழ் மட்டத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மண்டபம் இருந்திருக்கலாம். நாளடைவில் கோயில் மட்டம் உயரும்போது கீழ் உள்ள மண்டபம் மண்ணால் மூடப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பள்ளம் தோண்டும்போது அரிய பொருட்கள் கிடைத்துள்ளதாக சிலர் தவறாக வாட்ஸ் அப்பில் வதந்தியைப் பரப்பி விட்டுள்ளனர்” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x