

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 52 நாட்களே இருக்கும் நிலையில், திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைமை அலுவலகங்கள் நேற்று வரை வெறிச்சோடியிருந்தன. தேர்தல் திருவிழா இன்னும் பரபரப்பை எட்டவில்லை.
அனைத்து கூட்டணிகளிலும் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு ஆகியவை முடிவு செய்யப்படாமல் உள்ளதால் பெரும்பாலான கட்சிகள் தேர்தல் களப்பணியை இன்னும் தொடங்காமல் உள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் அதிமுக, திமுக - காங்கிரஸ், தேமுதிக ம.ந.கூட்டணி, பாஜக, பாமக ஆகியவை அதிகம் பேசப்படுகின்றன. இந்த கட்சிகள், அவற்றின் கூட்டணிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும், அவற்றில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் யார் என்பதெல்லாம் அடுத்துவரும் நாட்களில் இறுதியாகும்.
தேர்தலுக்கு இன்னும் 52 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் தேர்தல் குறித்து பல்வேறு விவாதங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் அதிகாரிகளும் 100 சதவீத வாக்குப் பதிவுக்கு தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
வெறிச்சோடிய அலுவலகங்கள்
ஆனால், கட்சியினர் மத்தியில் இன்னும் தேர்தல் உற்சாகம் குடிபுகவில்லை என்றே தெரிகிறது. திருநெல்வேலி மாநகரிலுள்ள சில முக்கிய கட்சிகளின் மாவட்ட தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு நேற்று காலையில் வலம்வந்தபோது இதை காணமுடிந்தது. திருநெல்வேலி வண்ணார்பேட்டை, சந்திப்பு, புரம் பகுதிகளில்தான் முக்கிய கட்சி அலுவலகங்கள் இருக்கின்றன.
திருநெல்வேலி வண்ணார் பேட்டை வடக்கு புறவழிச் சாலையிலுள்ள மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகம் நேற்று காலையில் திறக்கப்பட்டிருந்தது. அலுவலகத்தினுள் ஒரு சிலர் மட்டுமே இருந்தனர். வெளியே வெறிச்சோடியிருந்தது. தொண்டர் களைக் காண முடியவில்லை. இதே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டிருந்த பாஜக அலுவலகமும் வெறிச்சோடியி ருந்தது.
வண்ணார்பேட்டையிலுள்ள மத்திய மாவட்ட திமுக அலுவ லகம் மூடப்பட்டிருந்தது. வெளியே சில வாகனங்கள் மட்டுமே நின்றிருந்தன. வண்ணார் பேட்டையிலுள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகமும் ஆட்கள் அரவமின்றி காட்சியளித்தது.
(சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 52 நாட்களே இருக்கும் நிலையில், வண்ணார் பேட்டை வடக்கு புறவழிச் சாலையிலுள்ள மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகம், திமுக அலுவலகம் ஆகியவை தங்கள் கட்சி தலைவர்களின் படம் கூட இல்லாமல் களையிழந்துள்ளன. நெல்லை சந்திப்பில் உள்ள மதிமுக அலுவலகம், தேமுதிக அலுவலகம் ஆகியவையும் வெறிச்சோடியுள்ளன. படங்கள்: மு.லெட்சுமி அருண்)
மதிமுக, தேமுதிக
திருநெல்வேலி சந்திப்பு த.மு. சாலையிலுள்ள சரஸ்வதி பில்டிங்கில் செயல்படும் மதிமுக அலுவலகத்தில் கட்சியினர் ஒரு சிலர் அமர்ந்திருந்தனர். `தேர்தலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். 28-ம் தேதிக்குப்பின் கொடிகள், தோரணங்கள் என்று கட்சி அலுவலகம் களைகட்டும்; என்று மதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
திருநெல்வேலி ஸ்ரீபுரத்தி லுள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சி பெயர் பலகை மட்டும் வரவேற்றது. திருநெல்வேலி டவுனில் தேமுதிக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தேமுதிக மகளிரணி செயலாளர் பிரேமலதா பேசுவதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளதால் அவர் களை கட்சி அலுவலகம் பக்கம் காண முடியவில்லை.
சென்னையில் முகாம்
முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு நேர்காணலுக்கு சென்றவர்கள், நேர்காணலுக்கு அழைக்கப்படுவோம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளவர்கள், விருப்பமனு தாக்கல் செய்துள்ளவர்கள் என்று பலரும் சென்னையில் முகாமிட்டு சீட் பெறுவதற்காக காய்களை நகர்த்தி வருவதால், மாவட்டத்தில் உள்ள கட்சி அலுவலகங்களில் தேர்தல் களை கட்டவில்லை என்று அந்தந்த கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.
முன்பெல்லாம் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்னரே கட்சி அலுவலகங்களில் தொண்டர்கள் கூட்டத்தைக் காணமுடியும். தேர்தல் களப்பணிகளில் அவர்களது திட்டங்களும் வரையறுக்கப் பட்டுவிடும். இப்போது நிலைமை அப்படியில்லை. கூட்டணி குறித்த இழுபறிகள் முடிவுக்குவந்து, போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதியான பின்னர்தான் கட்சி அலுவலகங்கள் களைகட்டும் என்று எதிர்பார்க்கலாம்.